சஜித்தின் பலவீனமே அநுரவின் வெற்றி

சஜித்தின் பலவீனமே அநுரவின் வெற்றி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உருவாகுவதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தியின் பலவீனத்தால் தான் தேசிய மக்கள் சக்தி தேர்தல்களில் வெற்றி பெற்றது என முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு வங்குரோத்தடைந்த நிலையில் எவ்விதமான வாக்குறுதிகளும் மக்களுக்கு வழங்காமல் அரசாங்கத்தை பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் திட்டங்களை மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்தோம் என்று குறிப்பிடும் தார்மீக உரிமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கோ , அவரது அரசாங்கத்துக்கோ கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மீட்சித் திட்டங்களின் பயனையே தற்போதைய அரசாங்கம் அனுபவிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாச தரப்பினருக்கு விட்டுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைத்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதால் எந்த வித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. சஜித் பிரேமதாசவுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என்பதை அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமில்லாமல் புதிய அரசியல் கூட்டணியை அமைத்து எதனையும் சாதிக்க முடியாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )