
பெண்களின் பங்களிப்பு எங்கே?
ஒற்றையாட்சியை வலியுறுத்தும் இலங்கைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றும் போட்டி ஆரம்பமாகிவிட்டது. சில இடங்களில், குறிப்பாக யாழில், தம்மைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு தரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறது.
2009 இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் வழியிலேயே சென்றுதான் எமக்கான உரிமையை வென்றெடுக்க முடியும், வேறு வழியில்லை என்ற முடிவுடன் எமது மக்களும் வாக்களிக்க தயாராகி விட்டார்கள்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் 10ம் திகதியன்று, வீரம் செறிந்த, தியாகம் நிறைந்த, இடர்கள் சுமந்த அனைத்து ஈழப் பெண்களுக்குமான தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் கொண்டாடப்படுகிறது.
முதல் பெண்புலி மாவீரரின் நாள் பெண்களுக்கான எழுச்சி நாளாக தெரிவு செய்யப்பட்டது பொருத்தமானதே. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எமது பெண்கள் எவ்வளவு வல்லமையுடனும், தன்னம்பிக்கையுடனும் இருந்தார்கள், சாதனைகள் செய்தார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
இப்போது எங்கள் வாக்காளரில் 53% ஆனவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். தவிரவும் 2009 இனவழிப்பின் பின்னர் பெண் தலைமைத்துவக் குடும்பங்களே அதிகமாக உள்ளனர்.
பொருளாதார நிர்வாகம் பெண்கள் கையில் இருக்கும்போதுதான் பெண்களுக்கான நிதியுதவிகளைப் பெற்று வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். அதிகாரத்தில் பெண்கள் இல்லாத ஒரு நிலையில் எந்த வேலைத்திட்டமும் ஒரு கட்டத்திற்கு மேல் போக முடிவதில்லை என்பது வேதனைக்குரியதே.
இந்த நிலையில், 50% இற்கும் அதிகமானவர்கள் பெண்களாக இருக்கும் இடத்தில் எத்தனை கட்சிகள் தமது வேட்பாளர்களாக பெண்களை முன்னிறுத்தியுள்ளனர்? யாழில் 7 ஆசனங்களுக்கான தேர்தல் போட்டியில் 44 கட்சிகளைச் சேர்ந்த 396 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் எத்தனை வீதமானவர்கள் பெண்கள்?
விரல் விட்டு எண்ணக் கூடியளவில் ஒருசில கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும் எந்த இடத்திலும் அவர்களை வெற்றி பெற வைத்து பாராளுமன்றிற்கு அனுப்பும் எண்ணம் துளியளவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைக் காட்டி தமக்கு வாக்குகளைச் சேகரிப்பதிலும், எதிரிக்கு வாக்குகள் போகாமல் தடுப்பதிலுமே இந்தக் கட்சிகளின் பழைய பெருச்சாளிகள் கவனமாக இருக்கின்றனர்.
பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் வெளிவரும் துண்டுப் பிரசுரங்களையோ சுவரொட்டிகளையோ பாருங்கள். யாராவது இரு ஆண்களின் படங்களை முன்னிறுத்தி, அடுத்ததாக அந்தப் பெண்ணின் படம் இருக்கும். முன்னிறுத்தப்பட்டிருப்பவர்கள் முக்கியமானவர்கள் என்று மக்களும் அவர்களுக்கு வாக்கைப் போட்டுவிடுவார்கள்.
இந்த நிலைமை தொடர்வதால்தான், பெண்களில் அநேகர் நாட்கூலியாக வேலைசெய்து குடும்பத்தை கொண்டிழுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இதுவரை காலமும் கதிரைக்கு பாரமாக பாராளுமன்றம் சென்ற எந்தப் பழைய பெருச்சாளியும் சலுகைகளைப் பயன்படுத்தி பெண்களின் வாழ்வை மேம்படுத்த முன்வரவில்லை. ‘பார் லைசென்ஸ்’ வாங்குவதிலும் வாகனங்களை இறக்குவதிலும் இருந்த அக்கறை வேலைத்திட்டங்களை உருவாக்கி முன்னெடுப்பதில் இருந்திருந்தால், பெண்கள் முன்னேற்றம் அடைந்திருப்பார்கள்… சமுதாயம் முன்னேறியிருக்கும்.
ஊழலும், தில்லுமுல்லும் நிறைந்த, தனக்கென சொத்துக் குவிக்கும், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இவர்களை தூக்கியெறிய வேண்டாமா?
ஒரு துருக்கிய பழமொழி உண்டு: காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன. ஆனால் மரங்கள் மீண்டும் மீண்டும் கோடரிக்கே வாக்களித்தன – மரத்தினால் ஆன கைபிடியைக் காட்டி, ‘நானும் உங்களில் ஒருவன்தான்’ என கோடரி ஏமாற்றியதை முழுமையாக நம்பின… மனதார நம்பின – எங்கள் மக்களைப்போல.
இப்போது பெண்கள் விழித்துக்கொள்ள வேண்டும். எமக்குரிய உரிமைகளை தட்டியும் அதட்டியும் கேட்க முன்வந்தால் மட்டுமே பெண்களுக்கான உரிமை கிடைக்கும். அவர்கள் கொடுக்க மறுத்தால் என்ன? பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள், பெண்களுக்கான சங்கங்களை நிறுவுங்கள், முக்கியமாக துணிந்து நில்லுங்கள். சுயேச்சையாகவேனும் நின்று அதிகாரத்துக்கு வரவேண்டும். எங்களின் வேலைத்திறன் எங்களுக்கான வாக்கு வங்கியை கொண்டுவரும். நீங்களாக முன்வந்தால் சமூக மாற்றம் சாத்தியமே.

