
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
தமிழ் மக்களின் ஒற்றுமையின் பலத்தை உலகிற்கு காட்டுவதற்காக சனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் இரண்டு லட்சத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். கடைசி நேரத்தில் பொது வேட்பாளரை தெரிவு செய்தமை, அவரைத் தெரிவு செய்த பின்னர் பொது வேட்பாளர் தொடர்பான பிரசாரத்தை சரிவர மக்களுக்கிடையில் எடுத்துச் செல்லத் தவறியமை, பிரசாரத்திற்கான கால அவகாசமின்மை என்று அவர் அதிக வாக்குகள் பெறத் தவறியமைக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இறுதி நேரத்தில் இவ்வளவு வாக்குகள் கிடைத்தது எமக்கு வெற்றியே என்று எம்மைத் தேற்றிக் கொண்டாலும், அரசியலைப் பொறுத்தவரை மக்கள் மனதில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்கிற உண்மை முகத்தில் அறைந்ததுபோல எமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கும் மக்களின் ஒற்றுமைக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
காலங்காலமாக மக்களை ஏய்த்து அரசியல் செய்து பிழைக்கும் தமிழ்க் கட்சிகள் மக்களை இந்த நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கிறர்கள். மக்கள் எந்தத் தமிழ் அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இல்லை. சுயாட்சிக்காக குரல் கொடுக்கும் நாம் எந்தவொரு சுயநலமில்லாத அரசியல்வாதியையும் வளர்த்து விடவுமில்லை, எங்களுக்கென்று ஒரு நிலையான அரசியல் வேலைத்திட்டத்தை திட்டமிடவுமில்லை. பொது வேட்பாளருக்கான வாக்கு எண்ணிக்கையானது எமக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் செய்யப்படாத கடமைகளை உணர்த்தி நிற்கின்றது.
பல ஆண்டுகளாக இலங்கைத்தீவை மிக மோசமாக வழி நடத்திய சிங்களத் தலைமைகள் மீது சிங்களவர்க்கு இருந்த வெறுப்பு ஒரு சோசலிசக் கட்சியைச் சார்ந்தவரை சனாதிபதி ஆக்கியிருக்கிறது. புதிய சனாதிபதி அநுர குமார எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் இது எவ்வளவு காலத்திற்கு என்பதுதான் கேள்விக்குறி.
அவர் ஊழலை ஒழிக்கலாம். நாட்டின் பொருளாதாரத்தை செப்பனிடலாம். எதேச்சதிகாரம் புரிந்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரலாம். இன்னும் என்னென்னவோ செய்யலாம். ஆனால், இதே தலைமை தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தீர்வைப் பெற்றுத் தருவதாக எங்கும் உறுதியளித்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், 2009 இல் நடந்த இனவழிப்புக்கு ஒரு வகையில் துணை போனவர் என்று சொல்லப்படுபவர் இவர். சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று பகிரங்கமாகவே தெரிவித்தவர். அநுர கிட்டத்தட்ட 42% வாக்குகளால் வெற்றி பெற்றவர். அதாவது 58% மக்கள் அவரை தேர்வு செய்யவில்லை. இதனால் தமிழ் மக்களின் தீர்வுக்காக இவர் முயற்சித்தாலும் அது சாத்தியமாவது சந்தேகமே.
இவருடைய அண்மைய அதிரடித் திட்டங்களினால் எமது மக்களும் கவரப்படுவதையும், எமது இளையோரைக் கவர்ந்திழுக்கும் வேலைத்திட்டங்களும் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இது ஆபத்தானது. எமக்கான ஒரு சரியான அரசியல் பாதை இல்லாதவிடத்தில் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்காமலே மக்கள் இப்படி இலகுவாக சிங்களக் கட்சிகளுக்குள் கவரப்படலாம். பின்னர் அவர்களை மீளக் கொண்டுவருவது என்பது கடினமாக இருக்கும்,
ஜேவிபியினரும் ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர்கள், பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டவர்கள், போராட்டத்தில் தமது தலைமையைத் தொலைத்தவர்கள். தமக்கென ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுத்து அடித்தளத்திலிருந்து தம்மை மீளக் கட்டியமைத்து எழுந்திருக்கிறார்கள். இளையவர்களை வழிநடத்தி, தம்வசம் கொண்டுவந்து, படித்தவர்களை உள்வாங்கி, ஒரு நிழல் அரசாங்கத்தை தயார்பண்ணி இன்று ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.
இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எமது மண்ணில் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின் பதினைந்து வருடங்கள் வீண்டிக்கப்பட்டு விட்டன, வினைத்திறனுள்ள எதனையும் நாம் உருவாக்கவில்லை. தற்பொருளாதாரத்தைக் கட்டியமைக்கவில்லை. புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் பெருந்தொகைப் பணம் நாட்டின் கட்டுமானத்திலோ அல்லது எம்மை மீளக் கட்டியெழுப்பவோ பயன்படுத்தப்படவில்லை என்ற அப்பட்டமான உண்மை வேதனைக்குரியது. இப்போதும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் மக்கள் நம்மைவிட்டு அந்நியமாக்கப்பட்டு விடுவார்கள். இந்த தேர்தல் எமக்கு ஒரு பாடமாக அமையட்டும்.