முகத்திலறையும் உண்மைகள்

முகத்திலறையும் உண்மைகள்

விரும்பியோ விரும்பாமலோ தாமும் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்ய நேர்ந்துவிடும் என்று அதை எதிர்த்தவர்களும் இருக்கிறார்கள். இன்று, அவர்களே அப்படியொரு பொற்காலம் வந்துவிடாதா என்று ஏங்குமளவுக்கு தாயகத்தில் குற்றங்கள் பெருகிக் கிடக்கின்றன,
அண்மைக் காலத்தில் பேசுபொருளாகியிருப்பது ‘மருத்துவ மாஃபியா’, ‘மருந்து மாஃபியா’ போன்ற சொற்பதங்கள். ஒரு நேர்மையான வைத்திய அதிகாரி வெளியிட்ட தகவல்கள் அவரை ஒரு ‘ஹீரோ’வாக உயர்த்தியிருக்கின்றன.
போர் மௌனிக்கப்பட்ட பின்னர் வெளிப்படையாகத் தெரியும் வைத்திய நிர்வாகங்களின் குழறுபடிகள் பற்றி மக்கள் குறைப்பட்டுக் கொண்டாலும், சில சமயங்களில் முறையிட்டாலும் அதற்கு எந்தப் பலனும் இதுவரை இருந்திருக்கவில்லை. அவர்களிடம் போதுமான சாட்சியங்களும் இருக்கவில்லை, அல்லது சாட்சியங்கள் மூடி மறைக்கப்பட்டன. இப்போது, வைத்திய அதிகாரி ஒருவரே உள்ளே நடைபெறும் முறைகேடுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பதும், பொதுவெளியில் பேசுவதும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
‘வைத்தியர் சுகாதார அமைச்சின் கீழ் வேலை செய்பவர். அவர் நிர்வாக பிரமாணங்களின்படி தவறுகளைச் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். அதை விடுத்து பிரச்சனையை பொதுவெளிக்கு எடுத்து வந்தது தவறு’ என்று விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். கைதுகளும் காணாமல் ஆக்கப்படுதலுமே சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நாட்டில் தன்னந்தனியனாக ஒருவன் ஒரு பிரச்சனையைச் சுட்டிக் காட்டியிருந்தாலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பான்.
மக்களின் கிளர்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில், கடற்தொழில் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவானந்தா சாவகச்சேரி மருத்துவ மாஃபியாவை சரிசெய்வேன் என்ற போர்வையில் உடனே களமிறங்கி விட்டார். அமைச்சரவையில் தான் இதுபற்றி பேசியதாகவும் மக்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், இன்றுவரை அவர் அமைச்சரவையில் பேசியதற்கான எந்தத் தரவுகளும் இல்லை. ஹெகலிய ரம்புக்வெல்லவின் 130 மில்லியன் மருந்து மோசடிக்கு துணைபோனவர் டக்ளஸ். இவர் வடக்கில் மருத்துவ மாஃபியாவை அழிப்பார் என்று எந்த முகாந்தரத்தை வைத்து நம்ப முடியும்?
அப்படியே அவர் ஆசைப்பட்டாலும் GMOA எனப்படுகின்ற பலம்பொருந்திய வைத்தியர்களின் தொழிற்சங்கத்தின் பலத்தோடு அவரால் பொருத முடியவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உண்மையை வெளிக் கொணர்ந்த வைத்தியர்மீது நீதித்துறை, சுகாதாரத்துறை என்று பல துறைகள் ஒன்றாகப் பாய்ந்து பலகுற்றங்களை அடுக்கியுள்ளன. மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஊழலும் குற்றங்களும் நிறைந்திருப்பதைத்தான் இவை புலப்படுத்துகின்றன.
வைத்தியசாலை பற்றி அந்த வைத்தியர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும். ஆனால், தம்மிடமுள்ள ஆதாரங்களை பொதுமக்கள் திரட்டி எடுத்து இந்தப் பிரச்சனைகள் மூடி மறைக்கப்படாமல் செய்ய முடியும்.
இங்கே தோண்டத் தோண்ட குற்றங்கள் மேலே வந்தவண்ணம் இருக்கின்றன. கருக்கலைப்புகள், பிணத்தை எடுக்க வரும் உரியவர்களிடம் பணம் அறவிடப்படுவது, அரச மருத்துவமனை உபகரணங்கள் பாவிக்கப்படாது துருப்பிடிக்க வைக்கப்படுவது, வெளிநாடுகளிலிருந்து இலவசமாகக் கிடைத்த மருந்துகள் மக்களுக்கு விநியோகிக்கப்படாமை, அரச ஊதியம் பெறும் வைத்தியர்கள் கையெழுத்து மட்டும் போட வருவது, மக்களை தமது தனியார் மருத்துவமனைகளுக்கு வருமாறு அழைத்து கொள்ளை பணமீட்டுவது, அவர்களே மருந்துச்சாலைகள் நடத்துவது, அரச மருந்துகளை தனியார் மருந்துச்சாலைகளில் பணத்துக்கு விற்பது என்று குற்றப்பட்டியல் நீள்கிறது.
இவ்வளவும் வடக்கில் பணிபுரிந்த வைத்தியர்கள் பேசும்போது இடையிடை கொடுத்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள். தட்டிக் கேட்ட சில நேர்மையான வைத்திய அதிகாரிகள் உயிர்ப் பயம் காட்டப்பட்டு ஊரைவிட்டு விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார்கள். மனநோய் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் சம்பளப் பணம்கூட மறுக்கப்பட்டிருக்கிறது.
‘இது என்ன பெரிது…? இதைவிட சிறுநீரக மாஃபியா, ஓகன் மாஃபியா என்று…’ என்று தொடங்கிய வைத்தியர் ஒருவர் தனக்கு உயிராபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் மிகுதியைச் சொல்ல மறுத்து விட்டார். ‘மெர்சல்’ பட பாணியில் நடைபெறும் இந்தக் குற்றங்கள் இந்தியாவில் இல்லை. எமது தாயகத்தில், போருக்குப் பின்னான வடக்கில்தான் என்பது வேதனையிலும் வேதனை.
பாராளுமன்றில் புலி முழக்கமிடும் தமிழ் அரசியல்வாதிகளின் சாயமும் வெளுத்திருக்கிறது. சாவகச்சேரி ஊழலின் வெளிப்பாடு எங்கள் இன்னுமொரு ‘அரகலய’வை உருவாக்கிவிடுமோ என்று பயந்து ஓடிவந்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவை யாழில் மறித்து ‘சாவகச்சேரிப் பிரச்சனை பெரிதல்ல’ என்று சிறிதரனும், ‘மக்கள் இல்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து விட்டார்கள்’ என்று இதுவரை எதுவுமே செய்யாத சோம்பேறி தர்மலிங்கம் சித்தார்த்தனும், அவர்களோடு அங்கஜன் இராமநாதனும் தடுத்ததால் சுகாதார அமைச்சரின் சாவகச்சேரி வருகை யாழோடு நிறுத்தப் பட்டிருக்கிறது.
சட்டம் துணைபோகாத இடத்தில் மக்களின் எழுச்சி மட்டுமே குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்கும். மக்கள் எழுச்சிதான் நேர்மையான அதிகாரிகளை கவசமாகக் காக்கும். இப்போது விழுந்திருப்பது ஒரு சிறிய பொறி மட்டுமே. எல்லாத் துறைகளிலும் இப்படியான ஊழல்கள் மலிந்திருக்கின்றன. மக்கள் அனைத்தையும் இனம் கண்டுகொள்ள வேண்டும். எழுச்சியுடன் தட்டிக் கேட்க வேண்டும். ஊடகங்களின் துணையுடன் உண்மையை பரப்ப வேண்டும். மக்கள் ஒன்றுபட்டு பொங்கி எழுந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )