அனுபவமற்றவர்களிடம் நாடு உதவிக்கு வர ரணில் தயார்

அனுபவமற்றவர்களிடம் நாடு உதவிக்கு வர ரணில் தயார்

அனுபவமற்றவர்களிடம் நாட்டைக் கையளிக்கும் மக்கள் தீர்மானத்தினால் நாடு தற்போது பாரிய அவலங்களை எதிர் கொண்டுள்ளதாகவும் இதனால் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியாத அரிசிப் பிரச்சினை, தேங்காய்ப் பிரச்சினை என்பன ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இருந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது அரிசி பிரச்சினை இல்லை என்றும் மக்களின் வறுமையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கு தொன் கணக்கில் அரிசி வழங்கப்பட்டு பயனாளி ஒருவருக்கு இருபது கிலோ இலவச அரிசி விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு வேலையையும் கட்டம் கட்டமாக பயிற்சியளிக்க வேண்டிய தேவை இருக்கும் நிலையில் அவர்களிடம் ஆட்சியை வழங்கினால் அதன் நிலை எப்படியிருக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால், அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ரணில் விக்ரமசிங்க திரும்பிச் சென்று உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )