
இலங்கையின் அரசியற் களத்தில் சூதாட்ட நாயகன்
இலங்கைத் தீவின் பெரும் பணக்காரரான திரு தம்மிக பெரேரோ அரசியலில் வெளிப்படையாகக் கால் பதிப்பதற்கு ஏதுவாக வழி விட்டு, தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்திருக்கிறார் முன்னாள் நிதியமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ச. இதன் மூலம் இலைமறை காயாகவிருந்த ஒரு அரசியல் நாடகம் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. யார் இந்த தம்மிக பெரேரோ? இவர் எப்படிப் பண முதலையானார்? ஒரு மாபெரும் பணக்காரனுக்கு, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் ஊழல் மிகுந்த அரசியலில் என்ன வேலை? இவருக்காக பசில் ஏன் பதவி துறக்க வேண்டும்?….. இவ்வாறு கேள்விகள் எழும்.
சூதாட்டத்தின் மூலம் விரைவுப் பணக்காரராகும் எண்ணம் கொண்ட தம்மிக தனது 22வது வயதில் தாய்வான் சென்று சூதாட்டக் கல்வி கற்றவர். ஒரு சில ‘ஜாக்பாட்’ (Jackpot) இயந்திரங்களுடன் ஆரம்பித்த அவரது வாழ்க்கை, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் அழிவில் பலநூறு சூதாட்ட இயந்திரங்களையும் நாடு முமுவதும் விரவிக் கிடந்த சூதாட்ட விடுதிகளையும் கொண்டு பல்கிப் பெருகியது. அப்போது அரசுக்கட்டில் இருந்த பிரேமதாச சூதாட்டத்தை தடை செய்தபோது, ஏற்கனவே பெரும் பணக்காரர் ஆகியிருந்தார் தம்மிக. சூதாட்டத் தடையின் போது கார் வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர், பிரேமதாசவின் மறைவின் பின் மீண்டும் சூதாட்டத்தின் ஏகப்பிரதிநிதியாக, கட்டுக்கு மீறிய பணம் கொண்ட பெரும்புள்ளி ‘தாதா’ தம்மிக ஆனார்.
ஒரு சூதாட்டக்காரனுக்கும் அரசியலில் இருக்கும் மாஃபியாக்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்குமிடையில் வெளித்தெரியாத பிணைப்புகள் ஏராளம் இருக்கின்றன. அரசியல்வாதியின் செல்வாக்கு, அதிகாரம், சட்டத்தை வளைக்கும் நெளிவு சுழிவுகள் என்பனவற்றைப் பயன்படுத்தி வியாபாரி வளர்கிறான். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது, அரசியல்வாதிகளின் வெளியில் காட்டமுடியாத சொத்துக்களுக்கு பினாமியாக இருப்பது என்று பதிலுபகாரத்தை செய்கிறான் ஒரு வியாபாரி. இவ்வாறுதான் ராஜபக்சேக்கள் அதியுச்சத்தில் இருந்த காலத்தில் தம்மிக பெரேரோவும் மிகச் செல்வாக்குடன் இருந்தார். ராஜபக்சேக்களின் பினாமிகளில் தம்மிக முக்கியமான ஒருவர்.
முதலீட்டு சபையின் பணிப்பாளராகவும், போக்குவரத்து அமைச்சின் நிரந்தர செயலாளராகவும், இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளராகவும் இருந்தவர் தம்மிக. இந்தக் காலத்தில் நாமல் ராஜபக்ச தலைமை தாங்கிய இளைஞர் அமைப்பிற்கு முறைகேடாக 5 மில்லியன் ரூபா அரசுப்பணத்தை கைமாற்றியது தொடர்பாக 2015 இல் கைதானவர் இந்த தம்மிக. போக்குவரத்துச் சபையில் இவர் இருந்த காலத்தில் வாங்கிய பஸ் வண்டிகளுக்கு பணம் செலுத்தாமை, உதிரிப்பாகங்கள் வாங்கியதில் பாரிய ஊழல், சூதாட்ட விடுதிகளிற்கான அரச வரிப்பண ஏய்ப்பு, இங்கிலாந்திலிருந்து மருத்துவக் கழிவுகளை இலங்கையில் கொட்டி பணம் சம்பாதிக்க முயன்று மாட்டிக் கொண்டது…… என்று தம்மிகவின் குற்றப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
பசில் ராஜபக்சவும் சாதாரணமானவர் இல்லை. இரட்டைப் பிரசாவுரிமை கொண்ட பசில் ஒரு முன்னைநாள் நிதியமைச்சர். மொட்டுக்கட்சியின் உருவாக்கத்திலும் தேர்தலில் அவர்கள் பெற்ற அமோக வெற்றியிலும் பசிலிற்கு பெரும் பங்குண்டு. பதவி விலகியவுடன் பசில் கொடுத்த செவ்வியிலும் ஒன்று தெளிவாகியுள்ளது. பதவியில் இல்லையே தவிர, கட்சியின் செயற்பாடுகளில் தான் தீவிரமாக ஈடுபடப் போவதாக அவர் கூறியிருக்கிறார். மறுபக்கம் கோத்தா. ‘கோத்தா கோ கம’ ஆரம்பித்து 65 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பட்டினிச் சாவுகள் வீழத் தொடங்கி விட்டன. எது எவ்வாறிருப்பினும், தனது பதவிக் காலம் முடியும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு தான் பதவி விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் கோத்தா.
21ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து கோத்தாவின் அதிகாரத்தைக் குறைக்க முயலும் ரணிலின் செயற்பாடுகளினால், இரட்டைப் பிரசாவுரிமை கொண்ட ராஜபக்ச குடும்பத்தினரில் சிலரின் அரசியலுக்கு ஆப்பு விழுந்துவிடும். வீழும் பொருளாதாரத்தை தட்டி நிமிர்த்தவே தம்மிக அரசியலுக்குள் வந்தார் என்று கூறப்பட்டாலும், அதிகரிக்கும் ராஜபக்ச எதிர்ப்பிலிருந்து அவர்களை காப்பாற்றி ரட்சிக்கவும், பொருளாதாரச் சிக்கலுக்கு தீர்வு வேண்டி நிற்கும் மக்களைச் சாந்தப்படுத்தவும் தம்மிகவின் வரவு அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. நாட்டைச் சூறையாடிய கும்பலில் இருந்து ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் பதிலீடு செய்யப் பட்டிருக்கிறார். யார் கண்டது? பிரச்சனை தீவிரமடைந்து கோத்தா பதவி விலக நேர்ந்தால்…. தம்மிக ஜனாதிபதி தேர்தலில் வென்று, மறுபடியும் ராஜபக்சக்கள் அவரின் பின்னால் நின்று அரசியல் நடத்தும் காலம் வந்தாலும் வரும். திருட்டுக் கூட்டத்தை அடியோடு அழித்து, உண்மையாகவே தேசப்பற்றுக் கொண்ட இளையோர் அரசியலுக்கு வரும்போதுதான் மக்களுக்கு விமோசனம் கிடைக்க வாய்ப்புள்ளது.

