பசில்-லான்சா அணி மோதலால் ரணிலின் பிரசார ஏற்பாடுகள் சீர்குலைவு

பசில்-லான்சா அணி மோதலால் ரணிலின் பிரசார ஏற்பாடுகள் சீர்குலைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்ச அணி தொடர்ந்தும் பங்குபற்றினால் அதிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்படுவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்க நிமல் லான்சா உள்ளிட்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ராஜபக்ச முகாமின் ஆதரவு வேண்டுமா அல்லது அவரது சொந்த அணியினரின் ஆதரவு வேண்டுமா என்பதை ஜனாதிபதியே தெரிவு செய்ய வேண்டும் என அந்த குழு வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே கடும் முறுகல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், ”நாங்கள் உங்களுக்கு ஒரு தடவை வேண்டாம் என்றால் நீங்கள் எங்களுக்கு நூறு தடவைகள் வேண்டாம்” என்று, பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பஸில் ராஜபக்‌ஷ கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ”உங்களுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு வேண்டுமா? அல்லது எங்களிடமிருந்து செல்பவர்களின் ஒத்துழைப்பு வேண்டுமா? என்பது தொடர்பில் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” என்றும் பஸில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் தேர்தல் வழிநடத்தல் குழுவிற்கு பசில் ராஜபக்சவை அழைத்தமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குழுவினர், அதனையும் மீறி அவர் தொடர்ந்தும் பங்குபற்றுவதாக அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால தரப்பினரும் நிமல் லான்சா மற்றும் குழுவினருடன் இணைந்து செயற்படுவதால், இந்தக் கருத்தை எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டணியை உருவாக்குவதற்காக நிமல் லான்சா தலைமையில் ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டது.

மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்காக பசில் ராஜபக்சவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார். எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகியவர்களே தேர்தல் வழிநடத்தல் குழுவை பிரதிநிதித்துவம் செய்வதால் அவர்கள் பசில் ராஜபக்சவின் பிரசன்னத்தை விரும்பவில்லை.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )