
மீண்டுமொரு முறை போராட்டம் வெடிக்கும்
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்தாது அவற்றை ஒத்தி வைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும், அவ்வாறு ஒத்திவைத்தால் அது மீண்டுமொரு போராட்டத்திற்கே வழியமைக்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்கும் யோசனையை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளமை தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு கூறினார்.
அதன்போது சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்கும் யோசனையை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இது முழுமையாக ஜனநாயக விரோத செயற்படாகும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஏற்கனவே மாகாண சபைகள் தேர்தல் 5 வருடங்களாக நடத்தப்படாது இருக்கின்றது. மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு சிறிய திருத்தத்தை கொண்டுவந்தாலே போதுமானது. அத்துடன் உள்ளூராட்சி தேர்தல் கடந்த வருடத்தில் நடத்தப்படவிருந்த நிலையில் நிதி இல்லை என்று இன்னும் அந்தத் தேர்தல் நடத்தப்படாது இருக்கின்றது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். அதனை ஒத்திவைக்க முயற்சிக்கப்படுவதுடன், பொதுத் தேர்தலையும் ஒத்தி வைக்க திட்டமிடப்படுகின்றது. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம் என்பதுடன், இதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரினோம். மக்கள் ஆணை இல்லாது போயுள்ளதாக கூறினோம். ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினர். அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தனர். அவரின் பதவிக் காலத்தை நீடிக்கவே முயற்சிக்கின்றனர். இது மீண்டுமொரு போராட்டத்திற்கு கொண்டு செல்லும். ஜனநாயகத்தை இல்லாது செய்ய மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதனை கூறுகின்றோம்.