
யாழ். நூலகத் தீக்கிரைக்கு ரணிலும் முக்கிய காரணம்; ‘கறுப்பு ஜுலை’யிலும் அவர் கைவரிசை காட்டினார்
இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் மக்களை பிளவுபடுத்தி பாரிய யுத்தமொன்றை உருவாக்கினார்கள். வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்திற்காக யுத்தத்தை உருவாக்கினார்கள். பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கக்கூடிய வகையில் 1981 அபிவிருத்தி சபை தேர்தலை சீர்குலைத்திட நடவடிக்கை எடுத்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் காடையர் கும்பலை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்று நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள் தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பெண்கள் மாநாடு அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நூலகத்திற்கு தீ மூட்டுதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாழ் மக்கள் அந்த நூலகத்துடன் இணைந்து பல நூல்களை வாசித்தறிந்தார்கள். நானறிந்த நூலகங்கள் மத்தியில் பாதணிகளை கழற்றிவைத்துவிட்டு உட்பிரவேசிக்கின்ற நூலகம் யாழ்ப்பாண நூலகம் மாத்திரமே. மத வழிபாட்டுத் தலமொன்றுக்குச் செல்வதுபோல்தான் உட்பிரவேசிப்பார்கள். வடபகுதி மக்களுக்கும் யாழ் நூலகத்திற்கும் இடையில் அத்தகைய உறவே நிலவியது. எனினும் 1981 இல் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினருக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நூலகத்திற்கு தீமூட்டினார்கள். தாம் அந்தளவுக்கு மதிப்பளித்த நூலகத்திற்கு தேர்தலுக்காக தீவைத்ததும் தமிழ் மக்களின் இதயங்கள் வெடித்தன.
தெற்கின் அரசாங்கங்கள் தமது நூலகத்தை தீக்கிரையாக்கிய வேதனையில் இருந்து விடுபட முன்னராகவே 1983 “கறுப்பு ஜுலையை” உருவாக்கினார்கள். எமது கட்சியைத் தடைசெய்ய வேண்டிய தேவை ஜே.ஆருக்கு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள், மக்கள் விடுதலை முன்னணிமீது நம்பிக்கைவைத்து அதனைச் சுற்றி குழுமத் தொடங்கினார்கள். ஜே. ஆர். ஜயவர்தன அதனைக்கண்டு அச்சமடைந்தார்.
அன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜே. ஆர். ஜயவர்தனவின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலெனக் கருதி 1983 கறுப்பு ஜுலையைக் காரணங்காட்டி எமது கட்சியை தடைசெய்தார். ஜே. ஆர். ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க கொழும்பு நான்காம் குறுக்குத் தெருவினை தீக்கிரையாக்கி கறுப்பு ஜுலையை நிர்மாணித்தார். ஜே. ஆர். ஜயவர்தனவின் காடையர்கள் முழுநாட்டையும் தீப்பிழம்பாக மாற்றினார்கள். தமிழ் மக்களின் உடைமைகள், உயிர்களை கறுப்பு ஜுலை மூலமாக நாசமாக்கினார்கள்.
தற்போது தமிழ் “டயஸ்போறா” என இருக்கின்ற பலர் 1983 இல் நாட்டை விட்டுச் சென்றவர்களாவர். தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்களைப்போன்றே தமிழ் மக்களின் உயிர்களை அழித்தமை மற்றும் விரட்டியடித்தமை காரணமாக தனிநாடு ஒன்றை கட்டியெழுப்புகின்ற பிரபாகரனின் எண்ணக் கருவிற்கு பாரிய உந்துசக்தி கிடைத்தது. அதனூடாக பாரிய ஆயுதமேந்திய இயக்கமொன்று உருவாகியது.
வடக்கிலும் தெற்கிலும் உயிர்களால் நட்டஈடு செலுத்தியவர்கள் சாதாரண தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். வடக்கின் தாய்மார்களின் பிள்ளைகள் எல்.ரீ.ரீ.ஈ. இல் இணைந்தார்கள். மேலே இருக்கின்ற ஆட்சியாளர்கள் யுத்தத்தை உருவாக்கி எமது ஊர்களை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளினார்கள். சிங்களப் பிள்ளைகளை யுத்தத்திற்கு அனுப்பிவைத்தார்கள்.
மீண்டும் மோதல்கள் ஏற்படாத சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற தேசத்தை உருவாக்குவதே எமது தலையாய நோக்கம். எமது தலைமுறையினர் யுத்தம் புரிந்தாலும் எமது பிள்ளைகள் யுத்தத்தில் ஈடுபட இடமளிக்க முடியாது. சிங்கள அம்மா, அப்பாவைப்போன்றே தமிழ் அம்மா, அப்பாவிற்கும் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி இல்லாமல் போனமை, விவாகம் இல்லாமல் போனமை, மருந்துகள் இல்லாமல் போனமை போன்றே மனநிம்மதி இல்லாமல் போனமை தொடர்பில் பிரச்சினை நிலவுகின்றது.
அதனால் எமது தேவை ,பிளவுபடுவதை விடுத்து ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதாகும். மீண்டும் பிளவுபடாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. அதனால் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுகிறோம் என்றும் தெரிவித்தார்.