ஐ.தே.க வேட்பாளராக ரணில் களம் இறங்கார்; அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஐ.தே.க வேட்பாளராக ரணில் களம் இறங்கார்; அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார். இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது உறுதி. அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் விடுப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்மேலும் கூறுகையில்,

நாட்டில் முதலில் எந்த தேர்தல் நடக்கப் போகின்றது என்ற விடயம் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. அதுதொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர். ஆனால் முதலாவதாக நடக்கப்போவது ஜனாதிபதி தேர்தலே. அதற்காக நாங்களும் ஏனைய கட்சிகளும் தயாராகி வருகின்றோம். .அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட மாட்டார் என்பதில் பந்தயம் வைத்து தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பிரசாரம் செய்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள். ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று, நாடு எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு இரண்டு வருடங்களில் தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால், ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என்பது, அவர்களுக்கு தெரியும். இதனை தடுப்பதற்கே, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற பொய் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் நாட்டு மக்களுக்கு விடுப்பார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராகவோ அல்லது வேறு ஒரு கட்சியுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளராக களமிறங்கமாட்டார்.. மாறாக அனைவருக்கும் இணைந்துகொள்ள முடியுமான தேசிய வேட்பாளராகவே போட்டியிட உள்ளார் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )