
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பறிக்க முயற்சி அடக்கு முறைகள்,அத்து மீறல்களை நிறுத்த வேண்டும்
கல்முனை வடக்கு பிரதேச செயகத்தை இயங்க விடாது தடுப்பது அந்த மக்களின் மனித உரிமைகளை மீறும் செயல் . ஆகவே அந்த மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்என வலியுறுத்திய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறிதரன் கல்முனை வடக்கு தமிழர்களின் பிரதேசம், சுயமான, சுதேசிய தமிழ் மொழியை பேசுகின்றவர்கள் அவர்கள் என்ற காரணத்தினால்தான் அதனை பறிக்க முற்படுகின்றார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை காப்பாற்றுங்கள் என்று கடந்த 25 ஆம் திகதியிலிருந்து இன்று வரை (நேற்று ) 8 நாட்களாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்ற ஒரு பிரதேச செயலகத்தை மூடுவதற்கு , தரம் இறக்குவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் இதற்கு எதிராகவும் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கும் அத்து மீறல்களுக்குமான எதிர்ப்பைத் தெரிவித்துமே களமுனையில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த மக்களின் கோரிக்கைகளாக ”கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் உப அலுவலகம் ஒன்றாக தரம் குறைப்பதற்கான சட்டவிரோத சூழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் , கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப அலுவலகம் ஒன்றாக கருதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும். கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் தனது அதிகாரங்களை கல்முனை வடக்கு பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரயோகித்து வருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,1993-07-28 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாயாக நடைமுறைப்படுத்தி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீனமான தொழிற்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும்,கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைகளை வர்த்தமானிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பவை உள்ளன.
அத்துடன் 3 தசாப்தங்களுக்கு மேலாக நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு அரசியலுக்கு அப்பாற் சென்று நிரந்தர தீர்வொன்றை பெற்றுத் தருமாறும் அதனூடாக இப் பிராந்தியத்தில் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமாதானத்துடன் கூடிய சகவாழ்வையும் உறுதிப்படுத்துமாறும் அரசிடம் இப்பிரதேசத்தை . பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளன .
இந்த மக்கள் வாழும் நிலத்திலே 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது இந்த பிரதேச செயலாளர் பிரிவில் 29 கிராம சேவகர் அலுவலகங்கள் உள்ளன. அதனை விட 10,361 குடும்பங்களும் 36,346 மக்களும் அங்கு வாழ்கின்றார்கள் .இதில் தமிழர்கள் 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி 32,958 பேரும் முஸ்லிம்கள் 3,264 பேரும் சிங்களவர்கள் 124 பேரும் வாழ்கின்றார்கள் . இதில் இந்து சமயத்தவர்கள் 30,362 பேரும் கிறிஸ்தவர்கள் 2,593 பேரும் முஸ்லிம்கள் 3,264 பேரும் 124 பௌத்தர்களும் வாழ்கின்றார்கள். இங்கு 45 கோவில்கள் ,12 தேவாலயங்கள், 3 பள்ளிவாசல்கள் 1 விகாரை என்பனவும் உள்ளன. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 23,217.
வரலாற்று ரீதியாக ,பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்த ஒரு பிரதேசத்தின் செயலகம்.அது. தமிழர்களின் பிரதேசம் சுயமான சுதேசிய தமிழ் மொழியை பேசுகின்றவர்கள் என்ற காரணத்தினால்தான் அதனை பறிக்க முற்படுகின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவு தனியான நிலத்தொடர்புடன் கூடிய நிர்வாக நிலப்பரப்பை கொண்டுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு,மணல்சேனை போன்ற இந்தக் கிராமங்கள் மிக முக்கியத்துவமானவை.
1993-07-28 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானம் மூலம் முடிவு எடுக்கப்பட்டு இந்தப் பிரதேச செயலகம் தனித்துவமாக இயங்கிவருகின்றது. கடந்த முறை எம்.பி.யாக இருந்த கோடீஸ்வரன் இந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இருந்துள்ளார். இப்போதும் கூடபிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் திட்டமிட்டு கூட்டங்களை நடத்துவதில்லை.அங்கு செல்வதில்லை.அந்த மக்கள் தொடர்ந்து போராடுவதற்கான காரணம் இதுதான். ஆகவே மக்களின் இந்தக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.இந்த பிரதேச செயலத்தை இயங்க விடாது தடுப்பது அந்த மக்களின் மனித உரிமைகளை மீறும் செயல் . ஆகவே அந்த மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.அந்த மக்களுக்கு எமது முழு மையான ஆதரவை நாம் வழங்குவோம் என்றார்.