இரத்த ஆறு ஓடுமென எச்சரித்திருந்தேன்

இரத்த ஆறு ஓடுமென எச்சரித்திருந்தேன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.எனவே நானும் நீதியை கோருகிறேன் எனத்தெரிவித்த நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொர்பான விசாரணைகளை முன்னெடுக்க நீதிக்கட்டமைப்புக்கு முடியாது.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பேசப்படுகிறது.2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் நீதியமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ‘ ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் ஒருசில இலங்கையர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள்.நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும் செயற்பாடுகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். .ஆகவே இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் ‘ என்று எச்சரித்தேன்.

அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் நான் எச்சரித்த கருத்துக்கு எதிராக எமது அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் உட்பட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.விஜேயதாச ராஜபக்ஷ ‘ பொய்காரர்,இனவாதி,’ என்று என்னை கடுமையாக விமர்சித்தார்கள்.அதனை தொடர்ந்து அமைச்சு பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.

நான் குறிப்பிட்டதை போன்றே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் அப்போதைய அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் ‘அலரி மாளிகையில் ஊடக சந்திப்பை நடத்தி’ நடந்தது நடந்து விட்டது,நாங்கள் என்ன செய்வது’ என்று கூறினார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நான் சாட்சியமளித்தேன்.ஆணைக்குழுவுக்கு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எனக்கு எதிராக இரு தரப்பில் இருந்து நஷ்டஈடுகோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.வழக்குத் தாக்கல் செய்யுமாறு நான் சவால் விடுத்தேன்.ஆனால் இதுவரை எவரும் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபருக்கோ,நீதியமைச்சுக்கோ,நீதிமன்றத்துக்கோ விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.பொலிஸ் உட்பட விசாரணை தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தால் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )