சிறுபான்மையினருக்காக மீண்டும் செனட் சபை

சிறுபான்மையினருக்காக மீண்டும் செனட் சபை

1972 ஆம் அரசியலமைப்பே பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு வித்திட்டது. சிறுபான்மையின மக்களின் காப்பீடாக கொண்டுவரப்பட்ட 29 ஆவது சரத்து நீக்கப்பட்டதுடன் செனட் சபையும் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இதனாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தினர்.எனவே மீண்டும் செனட் சபை முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்ற திருத்த யோசனையை நான் முன்வைப்பேன். இந்த செனட் சபை யோசனைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர் தரப்பு பாரம்பரியமான காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டே முன்வைத்துள்ளது..சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் எமக்கும் அதிருப்தி உள்ளது. ஆளும் தரப்பின் பெரும்பாலான எம்.பி.க்கள் என்னிடமே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

சபாநாயகருக்கு எதிராக ஆளும் தரப்பினரே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்கட்சியினரே கொண்டு வந்துள்ளனர். சபாநாயகர்மீது ஆளும். எதிர்தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனால் சபாநாயகர் இன்று உதை பந்தாகிவிட்டார். சபாநாயகர் தொடர்பாக நல்லதாக எவரும் குறிப்பிடவில்லை.

நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன் வைத்த திருத்தங்களை சபாநாயகர் செயற்படுத்த வில்லை என்றும் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் முறையற்ற வகையில் வாக்களித்தார் என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அப்பாற்பட்டு பாராளுமன்றம் செயற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ் நிலை காப்பு சட்டத்தில் உயர் நீதிமன்றத்தின் திருத்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நிரூபிக்க முடியுமாவென நான் சவால் விடுக்கின்றேன்.

சட்டமூலத்தை உறுப்புரைக்கு உறுப்புரை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஆகவே தவறான சட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவே எதிர்கட்சியினர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச,சந்திரிகா ,மஹிந்த ராஜபக்ச,மைத்ரிபால் சிறிசேன, ஆகியோருக்கும் முன்னாள் பிரதமர்களான ஸ்ரீமாவோ ,ரணிலுக்கு நான் சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் . முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு நான் ஒருபோதும் சட்ட ஆலோசனை வழங்கவில்லை. அதனை நான் அதிர்ஷ்டமாக கருதுகின்றேன்.

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகரிடம் நான் பலமுறை அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளேன். சிறுபான்மையின பிரதிநிதி ஒருவர் இன்றும் நியமிக்கப்படாமலிருப்பது பாரிய குறைபாடு. இதற்கு சபாநாயகரும் பொறுப்புக்கூற வேண்டும்.

பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன .அரசியலமைப்பு பேரவையின் வாக்களிப்பு ஒன்றில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் இரு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.ஆகவே இவர்களுக்கு எதிராகவே முதலில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.

1972 ஆம் அரசியலமைப்பே பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு வித்திட்டது. சிறுபான்மையின மக்களின் காப்பீடாக கொண்டுவரப்பட்ட 29 ஆவது சரத்து நீக்கப்பட்டதுடன் செனட் சபையும் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இதனாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தினர்.

செனட் சபை நீக்கப்பட்டு தோற்றம் பெற்ற இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா 13 ஆவது திருத்த சட்டத்தை பலவந்தமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியது.ஆகவே தவறுகள் இனி வரும் காலங்களிலாவது திருத்தப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்புக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது மீண்டும் செனட் சபை முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்ற திருத்த யோசனையை நான் முன்வைப்பேன்.உலக நாடுகளில் செனட் சபை பலம் பொருந்தியதாகவுள்ளது ஆகவே சிறந்த மாற்றத்துக்கு நாமும் செல்ல வேண்டும் என்பதனால் சகலரும் இந்த செனட் சபை யோசனைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )