
எந்தத் தேர்தலையும் தடுக்க மாட்டோம்; கோட்டாவின் புத்தகம் கிடைக்கவில்லை
எந்தவொரு தேர்தலையும் தடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவில்லையெனவும் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென்பது முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையே தவிர அது தன்னுடைய நிலைப்பாடு அல்லவெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியில் மாற்றமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் அல்லவெனவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
காலி முகத்திடல் போராட்டத்தின் போது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு அறிவித்தார். அதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலகியதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை. ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாகவும் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடக்கூடிய பலர் எமது கட்சியில் இருக்கின்றனர்.
பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் தேர்தலில் போது பசில் ராஜபக்சவுடன் இருக்கும் நபர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். கெஹலிய ரம்புக்வெல தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கான வாய்ப்பினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்குமெனவும் தெரிவித்தார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட புத்தகம் தொடர்பில் எதையும் அறிந்திருக்கவில்லையெனவும் அவ்வாறு வெளியான புத்தகம் தொடர்பில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தனது புத்தகத்தின் பிரதியைக் கூட என்னிடம் தரவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவிடமிருந்து புத்தகத்தின் பிரதி எனக்கு கிடைக்கவில்லை. இந்தப் புத்தகத்தின் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஒரு புத்தகம் எழுதப் போகிறார் என்றும், அதை முழுமைப்படுத்த விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.