
மக்களின் வாக்குரிமை பறிப்புக்கு சுமந்திரனே காரணம்
மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு சுமந்திரன் எம்.பி.யே பொறுப்புக் கூற வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
சுமந்திரன் எம்.பி.உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறாரா அல்லது பிரதேச சபையில் உரையாற்றுகிறாரா என்று தெரியவில்லை. அவரது உரையில் விரக்தி மாத்திரமே உள்ளது..
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. சபையில் உரையாற்றுகையில் ‘உயர்நீதிமன்றம் வீட்டுக்கு செல்ல வேண்டும் ‘ என்று குறிப்பிட்டார்.இவர்களுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கும் போது சபைக்கு வந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு செல்லக் கூடாது என்று குறிப்பிடுகிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? எனக்கேள்வி எழுப்பினார்.
இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் ‘உயர்நீதிமன்றத்தின் குறை நிறைகளை சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு உண்டு.அன்று குறிப்பிட்ட விடயத்துக்கும்,இன்று குறிப்பிடும் விடயத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் உண்டு.நான் அன்று குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாறுப்பாடும் கிடையாது என்றார்.
தனது உரையை தொடர்ந்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ , மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.சிறந்த சட்ட வரைபை நாங்கள் தயார் செய்து முன்வைத்தோம்.உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை நான் எதிர்த்தேன்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் சுமந்திரன் எம்.பி.அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தார்.இதனால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு சுமந்திரன் எம்.பி.யே பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்த சுமந்திரன் எம்.பி.,நான் எதிர்க்கட்சி எம்.பி. நீங்கள் தான் அமைச்சரவை அமைச்சர் ஆகவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும் ‘ என்றார்.மீண்டும் தனது உரையை தொடர்ந்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ,நான் அமைச்சரவையில் இருந்தேன்.சிறந்த சட்டமூலத்தையே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தோம்.சட்டமூலம் குழுநிலை வேளையில் திருத்தம் செய்யப்பட்ட போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்கள் கவனத்திற் கொள்ளவில்லை.இவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால்தான் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.சிக்கலை சுமந்திரனே ஏற்படுத்தினார் என்றார்.