
ரணிலுடன் மகிந்த பசில் சந்திப்பு
தேர்தல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நேற்றைய தினம் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையிலேயே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது அரசியல் விடயங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ஷ, கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை திரும்பியதுடன், அவருக்கு விமான நிலையத்தில் வைத்து பொதுஜன பெரமுனவினரால் விசேட வரவேற்பளிக்கப்பட்டது.
இவரின் வருகையானது அரசியலில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் வகையில் அமையும் என்று பொதுஜன பெரமுன கடந்த நாட்களில் கூறிவந்தது.
இவ்வாறான நிலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மகிந்த ராஜபக்ஷவும், பஸில் ராஜபக்ஷவும் சந்திக்க நடவடிக்கை எடுத்திருப்பது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.