தேர்தலை இலக்கு வைத்தே ”தமிழருக்கு அரசியல் தீர்வு”; ரணிலின் தந்திரம் வெற்றி பெறாது

தேர்தலை இலக்கு வைத்தே ”தமிழருக்கு அரசியல் தீர்வு”; ரணிலின் தந்திரம் வெற்றி பெறாது

ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டே ”தமிழருக்கு அரசியல் தீர்வு” என்று ஜனாதிபதி ”தமிழருக்கு அரசியல் தீர்வு” விக்கிரமசிங்க கூறி வருகின்றார். எமக்கான அரசியல் அதிகாரத்தை வழங்காமல் ஆட்சிக்கு வருவதற்கு கூறும் பொய்கள் இந்த முறை வெற்றி பெறாது தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுக்காது விட்டால் தேர்தலில் அவர் தோல்வி அடைவது உறுதி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம்,நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்த ராஜபக்ஸ கோத்தபாய ராஜபக்ஸ,பசில் ராஜபக்ஸ உட்பட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ஆகியோரை பொருளாதார படுகொலையாளிகள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு செய்தியாக மாத்திரமே காணப்படுகிறதே தவிர அந்த தீர்ப்பை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை யார் நடத்தியது ?,எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என சனல் -4 தொலைக்காட்சியில் பல விடயங்கள் வெளிபடுத்தப்பட்டன .உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை,தேசிய மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவை நியமித்தார்.அத்துடன் அவ்விவகாரம் மூடி மறைக்கப்பட்டு விட்டது.

கடந்த காலங்களில் நடந்த விடயங்கள்,மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு போட்டியிடலாம்,யாரை வேட்பாளராக களமிறக்கலாம் எப்படி வெற்றி பெறலாம் என்பதில் மாத்திரம் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் தீர்வு வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படவில்லை.தமிழ் மக்களின் நலன் கருதி சட்டமூலங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்பதொன்றை உருவாக்குவதாக அரசாங்கம் கூறுகின்றது..ஆனால் இந்த செயற்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஏற்கவில்லை. கடுமையாக எதிர்க்கின்றார்கள்

ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ‘தமிழரின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு ‘என்று தற்போது ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஒன்று கூட முன்னெடுக்கப்படவில்லை.

வடக்கு , கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து.தமிழர் பிரதேசங்களில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதில் மாத்திரம் அவதானம் செலுத்தப்படுகிறது.ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தில் குச்சவெளி பகுதியில் உள்ள நான்கு விகாரைகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்குள் பௌத்த விகாரையை நிர்மாணிப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தமிழர்களோ ,சிங்களவர்களோ வாழாத பகுதிகளில் கூட பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார்.ஆனால் அந்த உத்தரவுகளை செயற்படுத்த முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசியலமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எமக்கான அரசியல் அதிகாரத்தை வழங்காமல் ஆட்சிக்கு வருவதற்கு கூறும் பொய்கள் இந்த முறை வெற்றி பெறாது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்காவிடின் தேர்தலில் அவர் தோல்வி அடைவது உறுதி என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )