இந்தியக் கடற்படை வேடிக்கை பார்க்கிறது; இதுவே பிரச்சினைக்கு காரணம் -யாழ்.மீனவர்கள் சீற்றம்

இந்தியக் கடற்படை வேடிக்கை பார்க்கிறது; இதுவே பிரச்சினைக்கு காரணம் -யாழ்.மீனவர்கள் சீற்றம்

இந்திய மீனவர்களை எல்லை தாண்ட விட்டு இந்தியக் கடற்படை வேடிக்கை பார்க்கிறது.தங்கள் நாட்டு எல்லையை தாண்ட ஏன் அவர்களை இந்தியக் கடற்படை அனுமதிக்கிறது. அவர்களால்தான் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்துள்ளது என யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்படையே இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீற விடாதே தொப்புக் கொடி உறவே எமது வாழ்கையை அழிக்காதே எனத் தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை யாழ் மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த

யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம், இந்திய மீனவர்களை எல்லை தாண்டா விட்டு இந்தியக் கடற்படை வேடிக்கை பார்க்கிறது .

இந்திய கடற்றொழிலாளர்கள் தங்கள் கடல் எல்லையைத் தாண்டுவதை இந்தியக் கடற்படை கட்டுப்படுத்த வேண்டும். தங்கள் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இதன் போது யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் கூறுகையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசாங்கம் மௌனம் காக்கக் கூடாது. இந்திய மீனவர்களால் எமது வாழ்வாதாரமும் கடல் வளமும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியத் துணை தூதரகத்தை முற்றுகையிட்டோம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் நிறுத்தப்படாவிட்டால் தொடர்ச்சியாக இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவதற்கான தீர்மானத்தை எடுப்போம் எனத் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அத்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார்,

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபடுவதுடன் எமது வலைகளை அறுத்து நாசம் செய்கிறார்கள்.இது கடந்த பல வருடங்களாகத் தொடர்கிறது. இதனால், எமக்கு இதுவரை கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் கூறுவதை இந்திய ஊடகங்களுக்கு அனுப்புங்கள் இந்திய மீனவர்களின் அத்து மீறல் தொடருமாயின் தடுப்பதற்காக சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )