
தேர்தலைப் பிற்போடும் இறுதி முயற்சியில் அரசு
இந்த ஆண்டு நடத்த வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முன்னெடுத்த சகல முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யும் இறுதி முயற்சியில் அரசு இறங்கியுள்ளதென சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் மேலும் ஒரு வருடம் பதவியில் இருக்க அரசு முயற்சிக்கிறது.அரசியலமைப்பின் படி இந்த ஆண்டு நடத்த வேண்டிய ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முன்னெடுத்த சகல முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் இறுதி முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசின் சாபத்தை முடிவுக்கு கொண்டு வருவதா அல்லது காலத்தை நீடித்து சாபத்தை தொடர்ந்து அனுபவிப்பதா என்பதை நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மட்டுமே உள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வாரம் தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம் என்றார்.