மலையகக் கட்சிகளுடன் சஜித் உடன்பாடு கைச்சாத்து; மனோ,திகா, இராதாவும் பங்கேற்பு

மலையகக் கட்சிகளுடன் சஜித் உடன்பாடு கைச்சாத்து; மனோ,திகா, இராதாவும் பங்கேற்பு

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டு மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகள் உட்பட உட்கட்டமைப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கி, அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

இலட்சக்கணக்கான மலையக பெருந்தோட்ட சமூகங்கள் நாட்டின் வாழ்வாதாரத்திற்கு பங்களிப்பதால், அவர்கள் எப்பொழுதும் கூலித்தொழிலாளிகளாக இருக்க வேண்டியதில்லை. தோட்டத் துறையில் விவசாய நிலம், வீடு மற்றும் தொழில்முனைவோராக செயற்படுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் உருவாகும் எனவும் கோசங்களுக்கு மட்டுப்படுத்தாமல் காலப்போக்கில் இம்மக்களை பலப்படுத்துவதற்கும் இச்சமூகம் தெளிவான சமூக கருத்தொற்றுமையை எட்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே, இந்த பிரச்சினைகள் அனைத்தையும் விவாதிப்போம், ஆனால் இந்த சமூக ஒப்பந்தத்தை இந்த நாட்டின் மண்ணிலும் ஜனநாயக வரலாற்றிலும் யதார்த்தமாக்க நாங்கள் பாடுபடுவோம்.

இது ஒரு முக்கியமான தருணம் என்று கூறலாம். ஏமாற்றப்பட்ட மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கு பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் முக்கியமான பயணத்தை மேற்கொள்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலையாய பங்களிப்பாகும் எனவும் தெரிவித்தார்.

தூய மலையக பெருந்தோட்ட சமூகத்தின் உண்மையான பிரதிநிதிகளுடன் இன்று (நேற்று) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாகவும், இந்த தலைவர்கள் தமது சமூகத்தை பாதுகாத்து அபிவிருத்தியின் விடியலை கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதேவேளை இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரிஷாத் பதியூதீன் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ள ஏனைய சில தரப்புகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருந்தன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )