
கோத்தா பாணியில் ரணிலின் செயற்பாடு வன்முறைக்குள் மக்களை அரசு தள்ளி விடக் கூடாது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போன்று பொலிஸாரைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்காமல், நாட்டை அமைதியான இடத்திற்கு கொண்டு வந்து நல்லிணக்கமான முடிவுகளை எடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவதே பாராளுமன்றத்தினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பு என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது மனிதாபிமானமற்ற வகையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கடுமையாக எதிர்க்க வேண்டும். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியில் அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கே இந்த நிலைமையென்றால் நாட்டின் ஜனநாயகம் குறித்து கடும் சிக்கல் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலை மற்றும் அதிக வரிச்சுமை ஆகியவற்றால் மக்களின் வாழ்க்கை மிகவும் கடுமையான சிரமத்திற்கும் அவலத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரச ஊழியர்களிடம் எந்த விவாதமும் இல்லாமல் பல பொதுத்துறை நிறுவனங்கள் துண்டு துண்டாக உடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை மின்சார சபை, காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் மூன்று அரச வங்கிகள் மீது கை வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைக்கு பொலிஸ் துறை ஒரு கும்பலின் பிடியில் சிக்கியிருப்பது வருத்தமளிக்கிறது.
காவலில் இருக்கும் பொலிஸார், தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். மக்களின் வெறுப்பையும் கோபத்தையும் குவிப்பதுதான் நடக்கிறது. கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது, அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது, 4000க்கும் மேற்பட்டோர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களை அடக்க முற்பட்டனர், ஆனால் மக்கள் எழுச்சிக்குப் பின்னர், அதெல்லாம் காணாமல் போனது.
மிகக் குறுகிய காலத்திற்குள்,6 மாதங்களுக்குள் நாட்டின் ஆட்சியை மாற்றும் தேர்தல் நடத்தப்படும். இந்தத் தருணத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது, தேர்தல் வரும் வரை அமைதியான முறையில் மக்களை கோபப்படுத்தாமல், மக்கள் சற்று சிந்தித்து முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளுவதுதான். மக்கள் கோபப்பட்டால் தேர்தலும் வன்முறையாகத்தான் இருக்கும். தேர்தலுக்குப் பிறகும் வன்முறைகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதி இந்த நிலைமை குறித்து சிந்தித்து பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக செயற்பட வேண்டும். எட்டப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை என்பது முழுக்க முழுக்க குழப்பமாக மாறப் போகிறது. பொருளாதாரம் நிலையாக இல்லை. இது மிகவும் கடினமான பயணம்.
கோட்டாபயவின் ஆட்சிக் காலத்திலும் மக்களின் கோபத்தைத் தூண்டும் சதிகள் இடம்பெற்றன. எனவே, நாட்டை அமைதியான நிலைக்கு கொண்டு வருவதும் பொது சிந்தனையின் அடிப்படையில் மக்கள் முடிவெடுக்கும் சூழலை உருவாக்குவதும் ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.