
சட்டத்தை திருத்துங்கள்; ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்து
சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை, மனித உரிமைகள் தொடர்பான கடப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் வகையில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் , “புதிய நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்” என்று முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X தளத்தில் இட்ட ஒரு பதிவில் கூறியுள்ளது.
“சிவில் சமூகம் மற்றும் தொழில் குழுக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், மனித உரிமைக் கடப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்வதை பரிசீலிக்குமாறும் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளான இந்தச் சட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது.