ஜனாதிபதிக்கு மேலும் 2000 இலட்சம் ரூபா!; கோரப்படுவது ஏன்?; அனுரகுமார கேள்வி

ஜனாதிபதிக்கு மேலும் 2000 இலட்சம் ரூபா!; கோரப்படுவது ஏன்?; அனுரகுமார கேள்வி

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக குறை நிரப்பு பிரேரணை ஊடாக மேலும் 2000 இலட்சம் ரூபா கோரப்படுவது ஏன்? என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்துக்கு குறைநிரப்பு பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.இதனூடாக ஜனாதிபதியின் மேலதிக செலவுகளுக்காக 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 2000 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

வரவு செலவு திட்டத்தின் போது ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள்,எரிபொருள் மற்றும் வாகனங்களுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கான செலவினங்கள் நாட்டுக்கு பாரிய சுமை என்பதை பலமுறை குறிப்பிட்டுள்ளோம். இதற்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்க குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனாதிபதி நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலத்தில் இருந்து முழு உலகத்தையும் சுற்றிவருகின்றார். இவரை போன்று எவரும் உலகம் சுற்றவில்லை உலக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குப்பற்றாத மாநாடுகளில் உரையாற்றுகிறார். முழு உலகையும் சுற்றி விட்டு மீண்டும் உலகம் சுற்ற 2000 இலட்சம் ரூபா கேட்கிறார்.

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கும்,சீருடை வழங்குவதற்கும் மானியம் ஒதுக்கப்படவில்லை.பரீட்சை வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை.ஆனால் ஜனாதிபதி உல்லாச பயணம் செல்ல 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகிறது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றமும் சிந்திக்க வேண்டும்,ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு வரும் போது மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வரும் போது இவர்களின் வாகன பேரணியுடன் அம்புலன்ஸ் வண்டி வருகிறது. இவர்கள் படுக்கை நோயாளிகளா?ஆனால் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் அம்புலன்ஸ் இல்லை.இவ்வாறான செயற்பாடுகளின் போது மக்கள் எவ்வாறு திருப்தியுடன் வரி செலுத்துவார்கள்.

அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோக பூர்வ இல்லத்தில் வாழ முடியும்? அவரது தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமும் அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ?

இதேவேளை கப்பலில் களியாட்டம் நடத்தியது தற்போது பேசுபொருளாக உள்ளது. பகலில் 20 மீற்றர் தூரம் கூட தெரியாதவர்கள் இரவில் துறைமுகத்தை பார்வையிட சென்றார்களாம், யாரை ஏமாற்றுகின்றீர்கள்.நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் வரியை அதிகரித்து விட்டு அரச நிதியை மோசடி செய்கின்றீர்கள்.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன,ஏன் மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா குறை நிரப்பு பிரேரணை ஊடாக கோரப்படுகிறது என்பதை பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.இந்த கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )