சர்வதேசத்தின் மெளனத்தால் தினமும் ஒருவராகச் சாகிறோம்; மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

சர்வதேசத்தின் மெளனத்தால் தினமும் ஒருவராகச் சாகிறோம்; மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

பயங்கரவாத செயல்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம் என்பது பொலிஸாரின் குற்றச்சாட்டு. ஆனால் இங்கே பயங்கரவாத செயல்களை செய்வது இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி.யுமே எனவும் தங்களைப் பாதுகாக்க வேண்டியது சர்வதேச நாடுகளின் பொறுப்பாகும் எனவும் அவர்கள் காலம் தாழ்த்தி செல்லச் செல்ல தினமும் ஒருவராக உயிரிழக்கும் நிலை ஏற்படுமெனவும், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதியின் வவுனியா விஜயத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதிலும் தன்னுடைய கணவனை தேடி அலைந்த பெண்ணொருவரும் இதன்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரையில் அப்பெண் விடுதலை செய்யப்படவில்லை. நாங்கள் எங்களுடைய உறவுகளை கேட்டுத்தான் இந்த போராட்டங்களை செய்து வருகின்றோம். பயங்கரவாத செயல்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம் என்பது தான் பொலிஸாரின் குற்றச்சாட்டு.

ஆனால் இங்கே பயங்கரவாத செயல்களை செய்வது இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி எனப்படுபவர்களும்தான்.

இலங்கை அரசாங்கத்தால் எந்த ஒரு பிரயோசனமும் எங்களுக்கு இல்லை. காலங்கள் கடந்து செல்கின்றது. 33 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் எதுவித தீர்வும் எட்டாத நிலையிலேயே நாங்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கை அரசினால் அலுவலகங்களை உருவாக்குகிறார்கள். உருவாக்கி வெளிநாடுகளுக்கு சொல்லப்படுகின்ற ஒரு விடயம் என்னவென்றால் நாங்கள் உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இவர்களுக்கான தீர்வு பெற்று தருவோம் என்று. ஆனால் உண்மை அது இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓ.எம்.பி அலுவலகத்தை கொண்டு வருவார்கள். இப்போது ஒரு அலுவலகத்தை கொண்டு வரப் போகின்றார்கள். இவ்வாறு காலங்களை கடத்தி 33 வருடங்கள் சென்று விட்டது. இலங்கை அரசாங்கங்கள் எந்தவொரு தீர்வையும் தராத நிலையில்தான் நாங்கள் சர்வதேசத்தை நாடியிருக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்ற பட்சத்திலே ஜனாதிபதிக்கு இந்த அவலங்களை போராட்டங்களின் மூலமாக வெளிப்படுத்துகின்றோம். அதற்காக அடாவடித்தனமாக எங்களை தூண்டிவிட்டு வன்முறைக்கு உட்படுத்தி ஒரு பெண், ஒரு தாய் என்று பார்க்காமல் கைது செய்து அடைத்திருக்கிறார்கள். சர்வதேச நாடுகள் முன்வந்து அவரின் விடுதலையை வலியுறுத்தி உடனடியாக அந்த பெண்ணை விடுதலை செய்ய வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

அடாவடித்தனம் என்னும் போது நாங்கள் பொது சொத்துக்கு எதிராக செயல்படுவதில்லை, ஒவ்வொரு ஊடகமும் வெளியிடும் செய்திகளை பார்த்தால் பொது போக்குவரத்துக்கு தடை செய்வது பொலிஸார் தான் என்பதை அறியமுடியும்.அவர்கள்தான் அந்த அடாவடித்தனமான வேலையே செய்கின்றார்கள். நாங்கள் எங்கள் உரிமையை தான் கேட்டு நிற்கின்றோம். ஆனால் நாங்கள் அந்த உரிமையை கேட்டு நிற்கும் போது எமது வீட்டுக்கு தேடி வருகின்றார்கள். எம்மை பயங்கரவாதியாக காட்டுகின்றார்கள். குற்றவாளியாக எங்களை காட்டுகின்றார்கள்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் எங்களுடைய பிள்ளைகளை, கணவன்மார்களை கொடுத்திருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தாருங்கள் என்றும் இதற்கான பொறுப்பை கூறுங்கள் என்றும் தான் நாங்கள் போராடிவருகின்றோம். ஆனால் அவர்கள் எங்களிடம் மறைமுகமாகவும் நேரடியாகவும் இரவு வேளையிலும் வந்து விசாரணை என்கின்ற போர்வையில் எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எனது கணவரை கடத்தி சென்ற நந்தன எனப்படும் நபர் தாண்டியடி முகாமில் இருக்கின்றார். நான் ஒரு தனி பெண்ணாக இந்த தகவல்களை தேடி சேகரித்த அளவிற்கு ஏன் இந்த பொலிஸார் செய்யவில்லை.குற்றம் செய்யச் சொன்னவர்களும் அவர்களே, குற்றம் செய்தவர்களும் அவர்களே என்பதால் எங்களால் குற்றவாளிகளிடம் சென்று நீதி கேட்க முடியாத நிலைமை உள்ளது. இந்த 34 வருடங்களாக நீதி கேட்டு நாங்கள் தோல்வியுற்று விட்டோம்.இதனால் தான் நாங்கள் சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம்.

எனவே சர்வதேச நாடுகள் முன்வந்து எங்களுடைய இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்கின்ற பொறுப்பு கூறலை உறுதிப்படுத்தி வைக்குமாறு வேண்டி நிற்கிறோம்.

எனவே,உடனடியாக இந்த ஜெனித்தா என்கின்ற சகோதரியை விடுதலை செய்வதற்கு எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இனிமேல் இவ்வாறான துன்ப துயரங்கள் நடக்காமல் பாதுகாக்க வேண்டியது சர்வதேச நாடுகளின் பொறுப்பாகும். காலம் தாழ்த்தி செல்லச் செல்ல குரல் நசுக்கப்பட்டு இனிமேல் நாங்கள் உயிரோடு இல்லாமல் போகும் சூழல் வருகின்றது.

இதுவரை பல தரப்பட்ட தாய்மார்களை நாங்கள் இழந்து நிற்கின்றோம். அதேபோல எங்களையும் இல்லாமல் செய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. நீங்கள் மௌனமாக இருக்க ஒவ்வொருத்தராக நாங்கள் அழிந்து செல்வோம்.

உடனடியாக இவர்களுக்கு விடுதலை வேண்டும். அவரும் தனது கணவரை தொலைத்து விட்டு தேடுகின்ற ஒரு பெண். இவர் சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்காக மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக இலங்கை அரசாங்கம் இந்த பெண்ணுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )