
மரக்கறிகளின் விலைகள் வரலாறு காணாத உயர்வு; கரட்-750, கோவா-500, போஞ்சி-600 ரூபா
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
தற்போது ஒரு கிலோ கரட்டின் விலை 750 ரூபாவாகவும், பீட்ரூட்டின் விலை 380 ரூபாவாகவும், கோவாவின் விலை 500 ரூபாவாகவும், போஞ்சியின் விலை 600 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
போதிய போக்குவரத்தின்மையும், பெற்றோல் விலை அதிகரிப்புமே விலை அதிகரிப்பிற்கு காரணம் என கண்டி சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவு காரணமாக கண்டி மஹியங்கனை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதால் இப்பகுதி மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு அனுப்ப முடியாதுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உன்னஸ்கிரிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதனால் மரக்கறிகளை சேகரிக்கும் லொறிகள் இப்பகுதிக்கு செல்லமுடியாதுள்ளது, இதனால் மேலும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்த மரக்கறி காணிகள் நீர் நிரம்பியுள்ளதால் மரக்கறிகள் அழிந்துள்ளன. இதனாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் அழிவு நிலைப்பற்றி இது வரை யாரும் பார்க்காததால் மக்கள் விரக்தியடைந்து பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். கண்டி பொதுச் சந்தைக்கு நேற்று மலையகத்திலிருந்து கினிகத்தேனை , மயிலப்பிட்டி , தலாத்துஓய, தெல்தோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சில லொறிகள் வந்ததாகவும், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதோடு பெற்றோல் விலை உயர்வு காரணமாக மேலும் விலை அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

