வரி குறைப்பே எமது பிரதான கொள்கை; அடுத்த தேர்தல்களில் நிலையான அரசை தோற்றுவிப்போம்

வரி குறைப்பே எமது பிரதான கொள்கை; அடுத்த தேர்தல்களில் நிலையான அரசை தோற்றுவிப்போம்

அரசாங்கத்தின் பங்காளியாக பொதுஜன பெரமுன இருந்தாலும்,எமது அரசியல் கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவரே அரசுத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். எனவே அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிலையான அரசாங்கத்தை தோற்றுவிப்பது பொதுஜன பெரமுனவின் பிரதான கடமை எனக்குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ, பொருளாதாரம் தொடர்பான எனது கொள்கையில் வரி குறைப்பு முக்கியமானது .எனவே எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் வாக்காளர்கள் வரிக் கொள்கை மற்றும் கடந்தகால பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றை ஆராய்ந்து அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2006 முதல் 2014 வரையான காலப்பகுதியில் நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்வதற்கு வரி குறைப்பு கொள்கை முக்கிய அம்சமாக இருந்தது.நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள கூடிய வகையில் நாங்கள் வரிக் கொள்கையை அமுல்படுத்தினோம்.பொருளாதாரம் தொடர்பான எனது கொள்கையில் வரி குறைப்பு முக்கியமானது.

ஆனால் கடந்த காலங்களில் குறைவான வரி கொள்கை ராஜபக்ஸக்களுக்கு எதிரான பிரசாரமாக பயன்படுத்தப்பட்டது. செல்வந்தர்களுக்கு சலுகை வழங்குவதற்காகவே ராஜபக்ஸக்கள் வரிகளை குறைத்ததாக அரசியல் சேறு பூசப்படுகிறது. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. முதலீட்டுச் சபைச் சட்டம் மற்றும் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் சட்டம் உட்பட சட்ட ஒழுங்குகளுக்கு அமைய முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகவே வரிச் சலுகை வழங்கப்பட்டது .

2015 ஆம் ஆண்டு எமது அரசாங்கம் தோல்வியடைந்ததன் பின்னர்,குறைவான வரிக் கொள்கைக்கு பதிலாக வரிக் கொள்கை திருத்தியமைக்கப்பட்டு வரிகள் அதிகரிக்கப்பட்டன.

2015 -2019 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரசாங்கம் தவறான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தி வெளிநாட்டு கடன் பெறும் வேகத்தை அதிகரித்தது.2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் போது சர்வதேச பிணைமுறியங்களிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடன் 5000 மில்லியன் டொலராக காணப்பட்டது.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் 10,000 மில்லியன் டொலர்களை சர்வதேச பிணை முறியங்களிடமிருந்து கடனாக பெற்றது.இது தான் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பை முறித்தது.

2019ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பிரதமராக நான் பதவியேற்றதை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தை நாடிய போது இலங்கையின் கடன் நிலை எல்லை கடந்துள்ளதால்,அவசர நிவாரண கடன் வசதியை இலங்கைக்கு வழங்க முடியாது என நாணய நிதியம் எமக்கு கூறியது. அதனைத் தொடர்ந்து தமது ஒத்துழைப்பை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமான நிபந்தனைகளை நாணய நிதியம் முன்வைத்தது.அன்று நாங்கள் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொரோனா தொற்று தாக்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்திருக்க முடியாது .

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின் பகுதியாக கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தியுள்ளது.ஒரே கட்டத்தில் வரி கொள்கைகளை திருத்தியமைத்து வரிகளை அதிகரித்துள்ளதால் துறைசார் நிபுணர்கள் வரிக்கொள்கைக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரச சேவையில் முக்கிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தினர் பல மாதகாலமாக வருமான வரியை குறைக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தாலும்,எமது அரசியல் கொள்கைக்கு எதிரான கொள்கையுடைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பிரதானியாகவும்,அரச தலைவராகவும் பதவி வகிக்கிறார்.நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டு அராஜக நிலை தலைதூக்கிய சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார் எனவே அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிலையான அரசாங்கத்தை தோற்றுவிப்பது பொதுஜன பெரமுனவின் பிரதான கடமை .

எனவே எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் வாக்காளர்கள் வரிக் கொள்கை மற்றும் கடந்தகால பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றை ஆராய்ந்து அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.தேர்தல் நெருங்கும் போது ஒருதரப்பினர் மக்களை திசைத்திருப்பி மக்களின் அரசியல் சிந்தனைகளை மழுங்கடிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்கின்றனர் .

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஒருசில வாக்காளர்கள் கவனயீனமாக எடுத்த தீர்மானத்தின் பெறுபேற்றுடன் இன்றும் வாழ்கிறோம்.மீண்டும் அவ்வாறான தவறான தீர்மானத்தை இந்த நாடு தாங்கிக் கொள்ளாது எனவே தர்க்க ரீதியிலான உண்மை மற்றும் தரவு அடிப்படையிலான விடயங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )