
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஊழல்,மோசடிக்கு கதவுகள் திறப்பு
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழல் மற்றும் எரிபொருள்,மின்சார மோசடிகளுக்கு கதவை திறந்து விட்டுள்ளார். ஜனாதிபதிக்கு இப்போது மோசடி அதிகாரிகளும் மோசடியான அமைச்சர்களுமே தேவை என ஜே .வி.பி.தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
கிளிநொச்சி பூநகரியில் 700 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்துக்கு 50 ரூபா என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிய மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.மக்களும் அதை நம்புகிறார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக அராசாங்கம் செயற்படுகிறது
நிலக்கரி,எரிபொருள் கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.மோசடி செய்தவர்கள் ஜனாதிபதியின் அமைச்சரவையில் உள்ளார்கள்.பூநகரி மின்னுற்பத்தித் திட்டத்தில் 500 மெகாவாட் அலகை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்த நாடு என்ன ஆட்சியாளர்களின் சொத்தா ?
ஜனாதிபதிக்கு ஒரு சில மோசடி அதிகாரிகளும் தேவை, மோசடியான அமைச்சர்களுக்கும் தேவை. அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார். மாத்தறை மாவட்டத்தின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக ஊழல்மற்றும் எரிபொருள்,மின்சார மோசடிகளுக்கு கதவை திறந்து விட்டுள்ளார். .மறுபுறம் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சகல மோசடிகளிலும் முன்னிலையில் உள்ளார் என்றார்.

