
மட்டு. இராணுவத்தினரிடம் மக்களின் பல காணிகள்; விடுவிக்கக் கோருகிறார் சாணக்கியன்
மட்டக்களப்பில் இராணுவத்தினரிடம் மக்களின் பல காணிகள் காணப்படுகின்றன. இவற்றினை விடுவிக்க ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன் அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன்.நீங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இக் காணிகளை மக்களுக்கு கையளிக்க மற்றும் விடுவிக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறுகையில்,
குருக்கள்மட இராணுவ முகாம் பற்றி நாம் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி அதில் ஓர் பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதனை நீங்கள் துரிதப்படுத்தி தரவேண்டும் .
அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்கேணி பிரதேசத்தில் புதிதாக ஓர் காணியினை இராணுவம் தன் வசப்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிந்தோம். அதே போல் பாலையடி வெட்டை இராணுவ முகாமில் ஓர் பகுதியை அந்த ஊர் மக்கள் மலசல கூடம் அமைப்பதற்காக கேட்கின்றார்கள்.
எனவே இவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மட்டக்களப்பில் இவ்வாறாக பல காணிகள் காணப்படுகின்றன. இவற்றினை விடுவிக்க ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன் அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன்.நீங்கள் இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இக் காணிகளை மக்களுக்கு கையளிக்க கூடியதாக மற்றும் விடுவிக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை உங்களிடம் கோரிக்கையாக முன்வைக்கின்றேன். என்றார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், இது தொடர்பில் இரு வாரங்களில் ஒருதீர்மானத்தை அறிவிக்கின்றேன் என்றார்.

