
வட,கிழக்கில் பொலிஸ் பயங்கரவாதம் தாண்டவம்; தொடர்ந்தும் வஞ்சிக்காதீர்கள் தமிழர்களை அழித்து விடுங்கள்
வடக்கு,கிழக்கில் பொலிஸ் பயங்கரவாதம் தாண்டவம் ஆடுகின்றது. பொலிஸ் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அரசினால் முடியவில்லை. பொலிஸார் மிலேச்சத்தனமாக செயற்படுகின்றார்கள் .ஏன் உங்களுக்கு இவ்வளவு மோசமான இனவாத சிந்தனை?ஏன் நீங்கள் இனவெறியோடு தமிழர்களைப் பார்க்கின்றீர்கள்?இந்த நாடு உங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்றால் தமிழர்களை அழித்து விடுங்கள். அவர்களை தொடர்ந்தும் வஞ்சிக்காதீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாட்டில் நல்லிணக்கம் பற்றி ஜனாதிபதியிலிருந்து அமைச்சர்கள் வரை பேசுகின்றார்கள். இந்த நாட்டில் இணக்கம் ஏற்படப்போவதாக பல செய்திகள் வருகின்றன. ஆனால் இந்த நாட்டிலுள்ள சாதாரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகின்றார்கள். குறிப்பாக கடந்த நவம்பர் 25,26,27 ஆம் திகதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்ற பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்கு என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிய உணவு வழங்கியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதென்றால் இந்த நாட்டினுடைய ஜனநாயகம் என்ன? இந்த நாட்டில் என்ன நடக்கபோகின்றது?உங்கள் உதடுகளில் மட்டும்தான் நல்லிணக்கமா?இறந்துபோன தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தக்கூட தமிழர்களுக்கு உரித்தில்லையா?தயவு செய்து உங்கள் மன நிலைகளை மாற்றுங்கள்.
எனவே இவாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கையில் அச்சத்தை உருவாக்காதீர்கள். அது மிகப்பெரும் பாதிப்பை அந்த மக்களுக்கு ஏற்படுத்த்தியுள்ளது. அச்சத்தோடு வாழும் மக்களைத்தான் நீங்கள் ஆசைப்படுகின்றீர்களா? அவ்வாறானால் நீங்கள் சர்வதேச சமூகத்திற்கு சொல்லும் செய்தி என்ன?
வடக்கு,கிழக்கில் பொலிஸ் பயங்கரவாதம் தாண்டவம் ஆடுகின்றது. பொலிஸ் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அரசினால் முடியவில்லை. பொலிஸார் மிலேச்சத்தனமாக செயற்படுகின்றார்கள் .ஏன் உங்களுக்கு இவ்வளவு மோசமான இனவாத சிந்தனை?ஏன் நீங்கள் இனவெறியோடு தமிழர்களைப் பார்க்கின்றீர்கள்?திங்கட்கிழமை கூட யாழ் பல்கலைக்கழக மாணவர் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு.கிழக்கில் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். கொழும்பில் தமிழர்களின் தகவல்களை திரட்டுகின்றீர்கள். அப்படியானால் இந்த நாடு யாருக்கு சொந்தமானது?உங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்றால் தமிழர்களை அழித்து விடுங்கள் .ஏன் அவர்களை தொடர்ந்தும் வஞ்சிக்கின்றீர்கள்? நல்லிணக்கமென்று உதட்டளவில் பேசி சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டு இவ்வாறான விடயங்களை கையாளாதீர்கள்.தயவு செய்து தமிழ் மக்கள் நிம்மிதியாக வாழ ஒரு வழியை ஏற்படுத்துங்கள்
கொழும்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் தமிழர்களை கணக்கெடுத்தல் ,அவர்களின் விபரங்களை பதிவி செய்தல் என்ற விடயம் நாட்டின் சிவில் நிர்வாகத்திற்கு முரணாக நடைபெறுவதை திங்கட்கிழமை இந்த சபையிலே மனோகணேசன் எம்.பி. தெரிவித்திருந்தார். கொழும்பை மையப்படுத்தி வாழ்கின்ற தமிழர்களும் எம்மிடம் முறையிட்டார்கள்
காலை அல்லது மாலை நேரங்களில் பொலிஸார் சிங்களத்தில் மட்டும் உள்ள விண்ணப்ப படிவங்களைக்கொண்டு வந்து எங்களிடம் தருகின்றார்கள் இதனை பூர்த்தி செய்து விட்டு நாளை இரவுக்குள் தாருங்கள் அல்லது நாங்கள் வந்து இரவு எடுக்கின்றோம் என்று கூறுகின்றார்கள் என மக்கள் எம்மிடம் தெரிவித்தனர் .
நாட்டில் தற்போது சனத்தொகை கணக்கெடுப்பு நடக்கின்றது அது எல்லாக் கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் நடைபெறுகின்றது அது ஏன் கொழும்பு மாவட்டத்துக்கு மட்டும் பொலிஸார் அந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட வேண்டும்?இது கணக்கெடுப்பு திணைக்களம் ,ஆட்பதிவு திணைக்களம் இந்த விடயங்களை கையாளுகின்றபோது நாட்டினுடைய சிவில் விடயமாக நடைமுறையில் உள்ளதொரு விடயம்.
ஆனால் கொழும்பில் உள்ள தமிழர்கள் யார்,யார் எங்கெங்கு இருக்கின்றார்கள், அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறிவதற்கு சிங்கள பொலிஸார் அல்லது இராணுவத்தினரை பயன்படுத்தி சிங்களத்தில் படிவங்களைக்கொடுத்து இந்த விபரங்களை எடுக்க வேண்டிய தேவை ஏன் வந்தது?இதனை உடனடியாக நிறுத்தி நீங்கள் இந்த நாடு பூராக எவ்வாறு இந்தஹக் கணக்கெடுப்பு நடைபெறுகின்றதோ அதேவகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .இந்தக்கோரிக்கையை கொழும்பு வாழ் தமிழர்கள் சார்பில் இங்கு நான் முன் வைக்கின்றேன் என்றார்.

