வடக்கு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு

வடக்கு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் வடக்கு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அது தொடர்பில் விரைவில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பி.க்களுடன் பேச்சு நடத்துவேன் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அங்குள்ள இளைஞர்கள் முறையான தொழில் வாய்ப்பு இல்லாததால் போதை வஸ்துக்கு அடிமையாகியும் மோசமான வழிகளில் செல்கின்றார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளிக்கும் போதே இக் காலங்களில் நாம் இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அங்கு நிர்மாண த்துறை வேலை வாய்ப்புகள் பாரிய அளவில் காணப்படுகின்றன. அந்த நடவடிக்கைகளின் போது வடக்கிற்கு முன்னுரிமையளிக்கப்படும். அதேபோன்று ஏனைய நடவடிக்கைகளிலும் அவர்களுக்கு முன்னுரிமையளிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இது தொடர்பில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் விசேட பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முக்கிய பொறுப்புகளை நான் எனது இராஜாங்க அமைச்சருக்கு வழங்கியுள்ளேன்.தமிழ் மொழி மூலம் கடந்த அக்டோபர் மாதம் வரை 7056 பேருக்கு நாம் பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.

நாம் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )