
சுமந்திரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் இனவாதிகள்l கடுமையாகச் சாடிய விஜயதாஸ
சிங்களவர்களுடன் யுத்தம் செய்து இந்த நாட்டை பிரிக்கும் நோக்கம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை.வடக்கு மற்றும் கிழக்கின் இந்து வரலாற்றை அழிக்கும் நோக்கமே அவருக்கு இருந்தது.பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் சுமந்திரன்,பொன்னம்பலம் ஆகியோர் வடக்குக்கு செல்லவில்லை.பிரபாகரன் இன்றும் இருந்திருந்தால் இவர்கள் வடக்குக்கு செல்லமாட்டார்கள்.ஆகவே பாராளுமன்றத்தில் இனவாதத்தை தூண்டிவிடும் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டாம் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ வலியுறுத்தினார். .
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே இதனை வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டின் நீதியமைச்சராக நான் பதவி வகிப்பதையிட்டு வெட்கமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரன் நீதியமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கூறிய கருத்து தற்போதைய பேசுபொருளாகியுள்ளது.
மட்டக்களப்பு பகுதியில் உள்ள பிக்கு ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். நீதியமைச்சரால் எவ்வாறு கைது செய்ய முடியும். வெறுக்கத்தக்க கருத்தை குறிப்பிட்டிருந்தால் பொலிஸில் முறைப்பாடளியுங்கள், பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று நான் கூறினேன்
மாவீரர் நிகழ்வுகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிபதிகள் தடையுத்தரவு பிறப்பித்ததையிட்டு நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றார். நீதிபதிகள் சுயாதீனமாக செயற்படுவதையிட்டு நீதியமைச்சர் ஏன் வெட்கப்பட வேண்டும். நான் பெருமைப்பட வேண்டும்.
நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளதையிட்டு நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். சுமந்திரன் முன்வைத்த மூன்று விடயங்களை சாதாரண பிரஜை ஒருவர் குறிப்பிட்டிருந்தால் அதற்கு பதிலளிக்கலாம், ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் இவ்வாறு குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என்று நான் கூறினேன்.,அதற்கு சுமந்திரன் பதிலளிக்கவில்லை.
சுமந்திரனை கொலை செய்வதற்கு புலம் பெயர் அமைப்பினர் 20 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்தார்கள்.சுமந்திரன் உயிரின் பெறுமதி 20 இலட்சமா என்பது ஆச்சரியத்துக்குரியது.இந்த ஒப்பந்தத்துக்கு அமைய சுமந்திரனை கொலை செய்ய முற்பட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.இந்த ஐவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னை கொலை செய்ய முற்பட்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சுமந்திரன் கூறுகின்றார்..ஆனால் ஏனையவர்களை கொன்றவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செய்து செய்ய கூடாது என்கிறார்.
பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் சுமந்திரன்,பொன்னம்பலம் ஆகியோர் வடக்குக்கு செல்லவில்லை.பிரபாகரன் இன்றும் இருந்திருந்தால் இவர்கள் வடக்குக்கு செல்லமாட்டார்கள்.ஆகவே பாராளுமன்றத்தில் இனவாதத்தை தூண்டிவிடும் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டாம்.
யாழ்ப்பாணத்தில் கோயிலுக்குள் வைத்து துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்தார்.அதன் பின்னர் சிறிமாபோதி விகாரை மீது தாக்குலை மேற்கொண்டு பலர் கொலை செய்யப்பட்டார்கள். காத்தான்குடி பள்ளிவாசல்,தலதா மாளிகை மீது பிரபாகரன் தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்தார்.இந்த குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகளின் வரலாற்றை நாங்கள் நன்கு அறிவோம்.ஆகவே பிரபாகரன்,விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.சிங்களவர்களுடன் யுத்தம் செய்து இந்த நாட்டை பிரிக்கும் நோக்கம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை.வடக்கு மற்றும் கிழக்கின் இந்து வரலாற்றை அழிக்கும் நோக்கமே அவருக்கு இருந்தது.100 இற்கும் அதிகமான இந்து தமிழ் தலைவர்களை இதற்காகவே அவர் படுகொலை செய்தார்.
1975 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் மாநாடு ஒன்றை நடத்தி அமிர்தலிங்கம், ‘ நீங்கள் தான் தமிழர்களின் தலைவர் ‘ என்று குறிப்பிட்டு பிரபாகரன் கையில் வாளை கொடுத்தார்.அதன் பின்னர் பிரபாகரன் தான் அமிர்தலிங்கம்,யோகஸ்வரன் ஆகியோரை படுகொலை செய்தார்.இலங்கையில் மாத்திரமல்ல,சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொண்ட லக்ஷ்மன் கதிர்காமரையும் பிரபாகரன் கொலை செய்தார்.
இந்து தமிழர்கள் மீது வைராக்கியம் கொண்டு பிரபாகரன் இந்துக்களை கொலை செய்தார்.இவ்வாறான கசப்பான சம்பவங்களை கடந்து தற்போது தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி நாட்டில் சமாதானத்தை பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற நிலையில் இவர்கள் பாராளுமன்றத்துக்குள் இனவாதத்தை தூண்டிவிடுகிறார்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இனவாத்தை மாத்திரம் தூண்டிவிடுகிறார்.கஜேந்திரகுமாரின் சகாவாக உள்ள கஜேந்திரன் எம்.பி.விடுதலை புலிகளின் மாணவர் அமைப்பின் தலைவர். அவர் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றவர்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் குமார் பொன்னம்பலம் முற்போக்கானவர் சிறந்தவர்,ஆனால் கஜேந்திரகுமாரின் தந்தை ஜி.ஜி.பொன்னம்பலம் கடும் இனவாதி.இவர் 1950 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கம்பளையில் கூட்டத்தை நடத்தி சிங்கள மக்களை அவமதிக்கும் வகையில் வெறுக்கத்தக்க வகையில் கருத்துரைத்தார்.முழு சிங்கள சமூகமும் அவருக்கு எதிரானது.
அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட ஜி.ஜி. பொன்னம்பலம் இந்திய வம்சாவளி அந்தஸ்துடைய 6 இலட்சத்து 90 ஆயிரம் தமிழர்களின் குடியுரிமையை இரத்து செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘ இந்து – லங்கா குடியுரிமை’ சட்டமூலத்துக்கு ஆதரவாக கையுயர்த்தினார்.இந்த நாட்டில் தமிழர்களின் வாக்குரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் கையுயர்த்தி ஆதரவு வழங்கினார்.அமைச்சு பதவி உள்ள போது இது சரி,பதவி இல்லாத போது இனவாதம் என்றார்.

