மிகவும் கீழ்த்தரமான செயலில் நீதி அமைச்சர்; கவலை தெரிவித்த சுமந்திரன்

மிகவும் கீழ்த்தரமான செயலில் நீதி அமைச்சர்; கவலை தெரிவித்த சுமந்திரன்

என்னை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழே கைது செய்யப்படவில்லை. விசாரணைகளும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்படவில்லை.அத்துடன் அப்படியானவர்கள் கைது செய்யப்படுகின்ற போது நான் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டவுடனேயே நான் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உபயோகிக்கக்கூடாது என்று பகிரங்கமாக கூறி அவர்கள் பிணையில் விடுவிக்கப்படவும் உதவினேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசேட கூற்றை முன்வத்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ,சுமந்திரனை கொலை செய்வதற்கு புலம் பெயர் அமைப்பினர் 20 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்தார்கள் .இந்த ஒப்பந்தத்துக்கு அமைய சுமந்திரனை கொலை செய்ய முற்பட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.இந்த ஐவருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன்னை கொலை செய்ய முற்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சுமந்திரன் கூறுகின்றார்..ஆனால் ஏனையவர்களை கொன்றவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செய்து செய்ய கூடாது என்கிறார் எனத்தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

இன்று (நேற்று ) பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர், சென்ற தடவை நான் நீதி அமைச்சின் மீதான விவாதத்தில் பேசுகின்றபோது கூறிய விடயத்துக்கு தான் பதில் கூறியதாகவும் ஆனால் சண்டே டைம்ஸ் பத்திரிக்கை தன்னுடைய பதிலை அதில் சொல்லவில்லை என்று குறை கூறினார். அது அவரின் உரித்து அவர் அதனை கூறியது தொடர்பில் எனக்கு எந்த கருத்து மோதலும் கிடையாது.

ஆனால் அதனை சொல்லிவிட்டு என்னை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவிப்பது தொடர்பில் நான் எதுவும் சொல்லவில்லை என்றும் குறை கூறியிருந்தார். இது மிகவும் தவறான கருத்து நிலுவையில் உள்ள வழக்கைப் பற்றி அவர் வெளிப்படையாக பேசியிருக்கக்கூடாது.அது முதலாவது.

இரண்டாவது அப்படியானவர்கள் கைது செய்யப்படுகின்றபோது நான் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை. அவர்கள் கைது செய்யப் பட்டவுடனேயே பகிரங்கமாக நான் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உபயோகிக்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன்.அவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. விசாரணைகளும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அதற்கு பின்னர் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்த வேளையிலும் கூட அவர்களின் பிணை விண்ணப்பத்தின் போது எனது சட்டத்தரணிகள் ஊடாக பிணை விண்ணப்பத்திற்கு எந்த மறுப்பும் இல்லை என்று அறிவித்தேன் அவர்கள் இப்போது பிணையில்தான் இருக்கின்றார்கள். ஆகவே பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கவில்லை. பயங்கரவாத தடுப்பு சட்டம் உபயோகப்படுத்தக்கூடாது என்று பகிரங்கமாக சொல்லியுள்ளேன்.

வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் வேறு விடயங்களை இங்கு பேசுவது முறையற்றது. நீதி அமைச்சருக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். தவறான ஒரு கருத்தை நீதி அமைச்சர் மிகவும் கீழ்த்தரமான விதத்தில் இன்று ( நேற்று ) பாராளுமன்றத்தில் சொல்லியிருப்பதையிட்டு நான் கவலையடைகின்றேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )