நிறைவேற்று அதிகாரத்தை நீக்க நான் உடன்படவில்லை; ஒப்பந்தம் செய்யவும் இல்லை என்கிறார் ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரத்தை நீக்க நான் உடன்படவில்லை; ஒப்பந்தம் செய்யவும் இல்லை என்கிறார் ஜனாதிபதி

காலிமுகத்திடல் போராட்டத்திற்கும் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் எந்த வித தொடர்புகளுமில்லை.. யாழ்ப்பாணத்தில் ஆயிரம் பேரை ஒன்று சேர்க்க முடியாத எமக்கு இங்கு எவ்வாறு இவ்வளவு பேரைக் கூட்ட முடியுமென அவர்களே கூறினர் எனத்தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு. பேரவை, காலிமுகத்திடல் போராட்டம், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் சபைக்கு தெளிவூட்டினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தின் போது விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி என நான் தெரிவித்திருந்தேன் இது தொடர்பாக சபையில் அதற்கு முரணான கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். ஆனால் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு என்பது அரசியலமைப்பின் 17ஆம் திருத்தத்தின் வழக்கு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவே அரசியலமைப்பு சபையை நாங்கள் ஏற்பாடு செய்தோம். அதேபோன்று 2002 இல் முன்னாள் பிரதமர் நீதியசர் சரத் என் சில்வா தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் வழங்கிய தீர்ப்பு இருக்கிறது. அதன் பிரகாரமே தற்போது நாங்கள் செயற்படுகிறாேம். அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி என அன்று சுமந்திரன் எம்.பி நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இன்று பாராளுமன்றத்தில் அவ்வாறு இல்லை எனத் தெரிவிக்கிறார்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமாக்குவது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் சட்டத்தரணிகள் சங்கத்துடன் நான் கலந்துரையாடவும் இல்லை. எந்த ஒப்பந்தமும் செய்யவும் இல்லை. என்னை அவர்கள் அழைக்கவும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சட்டத்தரணிகளின் அறிவிப்பில் கைச்சாத்திட்டதில்லை. அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

ஆனால் மே மாதம் 9ஆம் திகதி நாங்கள் ஒன்றுகூடி இந்த அரசாங்கத்துக்கு ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் போனால் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து இதனை பொறுப்பேற்குமாறு தெரிவிப்போம் என தெரிவித்திருந்தோம். அவருக்கு முடியாது என்றால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பவருக்கு அரசாங்கத்தை கொண்டு நடத்த அழைப்பு விடுப்போம் என தெரிவித்திருந்தோம். இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் தேவையில்லை.

அத்துடன் மே 7,8ஆம் திகதிகளில் சட்டத்தணிகள் சங்கம் கோத்தபாய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறது. இதன்போது அரசியல் சார்பற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்றே அவர்கள் கலந்துரையாடி இருக்கின்றனர். சாலிய பீரிஸை தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து பிரதமராக்கும் எண்ணமே அவர்களுக்கு இருந்தது. ஆனால் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து நிலைமை மாறியது.

எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் எப்படியாவது பிரதமராகலாம் என்றே எண்ணிக்கொண்டிருந்தனர். அதற்காக பூரண தயார் நிலையிலேயே இருந்துள்ளார். ஆனால் மே 9ஆம் திகதி நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டபோது அவர்களின் திட்டம் பலிக்கவில்லை

அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்தை இவ்வாறே விட்டு விட்டால் இது பெரும் பிரச்சினையாகி விடும் என பலரும் தெரிவித்தனர். சுமந்திரன் எம்.பி.யும் அங்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதனால் சிலர் இது தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் பின்னணியைக்கொண்டது என்று தெரிவித்தனர். ஆனால் அது உண்மையல்ல . தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அதில் சம்பந்தப்படவில்லை என்பதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் ஆயிரம் பேரை ஒன்று சேர்க்க முடியாத எமக்கு இங்கு எவ்வாறு செய்வது? எங்களுக்கு அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம் என்றே அவர்கள் தெரிவித்து வந்தனர்.

மே 9ஆம் திகதி இவர்கள் திட்டமிட்டு வந்து, ஜனாதிபதியை விரட்டினார்கள். எனது வீட்டுக்கு நெருப்பு வைத்தார்கள். எனக்கு பதவி விலக சொன்னார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளவர் முன்வந்தால் நான் இந்த பதவியில் இருந்து நீங்குகிறேன் எனத் தெரிவித்தேன். நாட்டின் சட்டமும் அதுதான். ஆனால் அவர்கள் என்னை பதவி விலகுமாறே தெரிவித்து வந்தனர். அப்படியானால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வேறு மறைமுக சக்தி இருந்ததா என நாங்கள் பார்க்க வேண்டும்.

,இருந்தபோதும் நாங்கள் திங்கட்கிழமை அமைச்சரவையை கூட்டினோம். இதன்போது இவர்கள் புதன் கிழமை பிரதமர் அறையை முற்றுகையிட்டு தாக்கினார்கள் பின்னர் பாராளுமன்றத்தை முற்றுகையிட வந்தார்கள். இறுதியில் எமது பாராளுமன்ற சிறப்புரிமைகளை இல்லாமலாக்கவே ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்தனர். இதற்கு இடமளிக்க முடியாது என்பதால் நான் இராணுவத்தை அழைத்து பாராளுமன்றத்தை எப்படியாவது பாதுகாக்குமாறு தெரிவித்தேன்.

எனவே இந்த விடயங்களை சுமந்திரன் எம்.பி ஏற்றுக்கொள்வாராே இல்லையாே எனக்கு தெரியாது. இதுதொடர்பில் தற்போது விவாதித்து பயன் இல்லை. தேவையானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து இது தொடர்பாக ஆராய்வோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )