திருமலையில் இந்தியாவின் அனுமதி தேவை!

திருமலையில் இந்தியாவின் அனுமதி தேவை!

பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருகோணமலை மாவட்டத்தில் ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் அதற்கு இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கபீர் ஹாசிம் கேள்வி எழுப்பிய நிலையில் ஆம் .அவ்வாறுதான் ஒப்பந்தத்தில் உள்ளதென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் உள்ள எண்ணெய் தாங்கிகளின் 85 சதவீதத்தை சீனாவுக்கும்,மிகுதி 15 சதவீதத்தை துறைமுக அதிகார சபைக்கும் பொறுப்பாக்கும் வகையில் கடந்த காலத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.இதற்கமைய 15 சதவீத வருமானம் துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்றது.

2019 ஆம் ஆண்டுகோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் அம்பாந்தோட்டை எண்ணெய் தாங்கிகளின் உரிமத்தை சீனாவின் சைனோபாம் நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கினார்.இதனால் துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற 15 சதவீத வருமானம் இழக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் எரிபொருள் விநியோகத்துக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனம்,சீனாவின் சினோபாம் நிறுவனம் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தேசிய மட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கின்றன இந்த மூன்று நிறுவனங்களும் வருடாந்தம் 5000 கோடி ரூபா இலாபமடையும் என்ற நிலையில் இலங்கைக்கு 200 கோடி ரூபா கிடைக்கப் பெறும் என்று மதிப்பிடப்படுகிறது.இந்த நிறுவனங்கள் குறைந்தளவிலான டொலரை செலவழித்து அதிகளவான டொலரை நாட்டில் இருந்து கொண்டு செல்கின்றன

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அறிவு பூர்வமாக சிந்தித்து ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கினார்.ஆனால் கோத்தபாய ராஜபக்ஸ அரசாங்கத்தின் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ 500 மில்லியன் டொலருக்காக 96 எண்ணெய் தாங்கிகளை அறிவுபூர்வமற்று எவ்வித நிபந்தனைக ளுமில்லாமல் இந்தியாவுக்கு வழங்கினார்.

இந்த 96 எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் திருகோணமலை மாவட்டத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏதேனும் அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக இருந்தால் அதற்கு இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா? அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தால் அது பாரதூரமானது.இதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளிக்கையில் ஆம்.அவ்வாறுதான் உள்ளது. இதனை அண்மையில் தான் நாம் தெரிந்து கொண்டோம். இது தொடர்பில் நபவடிக்கை எடுப்போம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )