
இலங்கை மீனவர்கள் இந்தியச் சிறைகளில்; இந்திய மீனவர்கள் இலங்கையில் விடுதலை
நல்லிணக்க அடிப்படையில் இந்திய மீனவர்கள் 22 பேரையும் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தால் தென் பகுதியை சேர்ந்த எமது மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு அங்கு சிறைகளில் வாடுகிறார்கள். அவர்களையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி இனியாவது முயற்சி எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு 2 இந்திய படகுகளும் 22 மீனவர்களும் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் பணிப்புரையின் கீழ் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தின் ஊடாக தீர்வை நாங்கள் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில் இந்த சட்டம் அவ்வாறு நடைமுறையில் இருக்கும் நிலையில் இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்து இலங்கையில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரையும் விடுவித்துள்ளனர்.
இந்த மீனவர்களை எவ்வாறு ஜனாதிபதி விடுவிக்க முடியும்.?. அவ்வாறான அதிகாரம் இருக்கிறதா?
இந்த நிலையில் சட்டவிரோத செயற்பாட்டை செய்கிறவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமல் அவர்களை ஜனாதிபதியால் விடுவிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.
வடபகுதி மீனவர் குறிப்பாக மன்னாரில் இருக்கும் மீனவர்கள் கிளிநொச்சி கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி மீன் பிடியில் ஈடுபடுவதாக கூறி அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று வரை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இன்னும் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்தில் செல்வது கூட தடுக்கப்பட்ட விடயமாக இருக்கும் போது நாடு விட்டு நாடு வந்து எமது கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிப்பவர்களை எவ்வாறு ஜனாதிபதி விடுவிக்கலாம்?.
நாங்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டங்கள் இந்திய மீனவர்களின் வருகை நிறுத்துங்கள். அவர்களின் வருகையே இல்லாமல் ஆக்குங்கள் என்று போராடுவதை செவிடன் காதில் ஊதிய சங்கு போல எல்லா அரசியல் தலைவரும் கைவிட்டு ஜனாதிபதியே கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் இந்திய மீனவர்கள் 22 பேரையும் இந்தியாவில் உள்ள ஒரு அமைச்சர் கூறியதற்காக உடனடியாக எவ்வித கால தாமதம் இன்றி விடுவிப்பதாக இருந்தால் கடந்த 15 வருடங்களாக நாங்கள் குரல் கொடுத்து , கத்தி வருகிறோமே இலங்கையில் இருக்கின்ற நாங்கள் எல்லாம் மந்தைகளா?
இலங்கையில் இருந்துசென்ற வட பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட படகுகள் அங்கு இருக்கின்றன. அதை அவர்கள் நல்லிணைக்கு அடிப்படையில் என் விடுவிக்கவில்லை.
தென் பகுதியில் உள்ள எமது மீனவர்கள் பலர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு அங்கு சிறைகளில் வாடுகிறார்கள்.அவர்களையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி இனியாவது முயற்சி எடுக்க வேண்டும்.
நல்லிணக்கம் என்று கூறி அவர்களை விடுக்கின்றனர். இந்தியாவிடம் இலங்கை மாற்றீடாக எமது மீனவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தால் அவர்கள் செய்வார்களா என்பதை இந்த வேளையில் நாங்கள் கேட்டுக்கொள்ளுகின்றோம்.வெறுமனே ஒரு நாட்டிற்கு தாரை வார்ப்பதற்காக இந்த கடற்பரப்பு உள்ளதா?என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

