
ஜனாதிபதியின் பட்ஜெட் உரையில் தமிழில் இருப்பது ஏன் சிங்களம், ஆங்கிலத்தில் இல்லை
அரச நிறுவனங்களில் அமைய அடிப்படையில் தொழிலில் இருப்பவர்களின் தொழில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட தமிழ் மொழிமூலமான புத்தகத்தில் இடம்பெற்றுள்ளபோதும் அதன் சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான புத்தகத்தில் அந்த விடயங்கள் இடம்பெறவில்லை. இது தொடர்பாக நிதி அமைச்சிடம் வினவியபோது, இது தவறுதலாக தமிழ் மொழி மூல புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான எம்.எஸ். தெளபீக் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் தொழில் செய்கின்ற சுமார் 8 ஆயிரம ஊழியர்கள் இருக்கின்றனர். இந்த வரவு செலவு திட்டம் ஊடாக அவர்களையும் அந்த சேவையில் நிரந்தரமாக்குவதற்கான முன்மாெழிவை ஜனாதிபதி முன்வைப்பார் என்ற எதிர்பார்ப்புடனேயே அவர்கள் இருந்தார்கள்.
அவர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வைகையில் அந்த முன்மொழிவு வரவு செலவு திட்ட தமிழ் மொழி மூலமான புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மொழி மூலமான புத்தகத்தில் சேவையினை உறுதிப்படுத்தல் என்ற உப தலைபில், பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் வேறுபட்ட தற்காலிக திட்டங்களின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பல ஊழியர்களது சேவை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை. 180 நாட்களுக்கு அதிக காலம் சேவை புரிந்த அத்தகைய அமைய ஊழியர்களை அரசாங்கத்தின் ஒழுங்கு விதிகளுக் கு அமைவாக நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விடயம் வரவு செலவு திட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில புத்தகங்களில் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக நிதி அமைச்சிடம் வினவியபோது, இது தவறுதலாக தமிழ் மொழி மூல புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். ஜனாதிபதியும் தனது வரவு செலவு திட்ட உரையில் இந்த விடயத்தை வாசிக்கவும் இல்லை. ஜனாதிபதி முன்வைத்த தேசிய வரவு செலவு திட்டத்தில் இவ்வாறான தவறை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் அந்த ஊழியர்களுக்கும் இதனால் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.