
இலங்கையை மீட்க 20 வருடம் தேவை
இலங்கையில் ஐ.எம்.எவ். கோரிக்கைக்கு ஏற்ப வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிரச்சினைகளை ஆரம்பத்தில் தீர்க்காததன் விளைவே நாடு பொருளாதார ரீதியில் வீழ்வதற்கு காரணம் என மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்ற பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை யு.என்.டி.பி. மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் இணைந்து ஏற்பாடு செய்த, அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் பங்கு பற்றிய செயல் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் நாடு அதிலிருந்து மீள்வதற்கு சுமார் 20 வருடங்களாவது தேவைப்படும் என நான் நினைக்கிறேன்.
ஏனெனில் நாடு பொருளாதார ரீதியில் சிக்கல்களை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது அவற்றுக்கான தீர்வுகளை முன் வைத்திருக்க முடியும் அதை உரியவர்கள் செய்யவில்லை.
நாட்டின் பொருளாதார ரீதியில் ராஜபக்சக்கள் காரணம் என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ள நிலையில் அவர்களின் சிவில், அரசியல் உரிமைகள் பறிக்கப்படுமா என்ற சந்தேகம் இருகிறது.
ஏனெனில் தற்போதைய அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியினரின் செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்ற நிலையில் நாட்டின் ஜனாதிபதியும் அவர்களின் ஆதரவிலே ஆட்சியை கொண்டு நடத்துகிறார்.
மாகாண சபை தேர்தல், பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விகளுக்கு அப்பால் எதிர்வரும் வருடம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.
ஆகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் அல்லது அக்டோபர் காலப்பகுதியில் இடம்பெறும் என கூறப்படுகின்ற நிலையில் தேர்தல் மூலமே மக்கள் தீர்வை பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.