
இரத்தத்தில் தோய்ந்தது செஞ்சோலை!
வரலாறு மறக்குமோ?
வலிகள்தான் தொலையுமோ?
வள்ளிபுனத்து செழுமைநிலம்
நிணமும் சதையும்
தூவப்பட்டு
செந்நீரால் குளித்த
வரலாறு மறக்குமோ?
வலிகள்தான் தொலையுமோ?
செஞ்சோலைப் படுகொலை
நினைவுகள் அழியுமோ?
கொரோனாவில் போயிருந்தால்
கொடிய நோய் வந்ததென்று
காலம் கடந்தானும்
மனது கொஞ்சம் ஏற்றிருக்கும்.
சுனாமி வாரிச் சென்றிருந்தால்
இயற்கையின் சீற்றம் என்று
அழுதாலும்
ஆற்றியிருப்போம் எம்மனதை.
ராட்சசன் ராஜபக்ச
ஏவி விட்ட விமானங்கள்
கொத்தாகக் குண்டுவீசி
பள்ளிக் குழந்தைகளை
பாடையில் ஏற்றியதை
உலகம் மறக்கலாம்…
மகிந்தவை
நாங்கள் மன்னிக்கலாமா?
சதைத் துண்டங்களாய்
பிய்த்துபோய் கிடந்தார்கள்
அந்தப் பிஞ்சுகள்!
தலையில்லா கால்களில்லா
கைகளில்லா குவியலிடை..
என்மகவும் இருக்கிறதா
என்று
ஏங்கியழுது தேடிய
பெற்றவர் வலி..!!
எப்படிக் கடந்து போகும்?
மரண ஓலத்தில் குளித்தது
வள்ளிபுனம் அன்று!!
இடம்பெயர்ந்து தவித்தவர்க்கான
மனிதநேயக் கூடங்களுக்கு
பரிவோடு இடம்தந்து
அரவணைத்த இடம்
வள்ளிபுனம்!
செஞ்சோலை
சிறுவர் இல்லத்தையும்
தன்னகத்தே கொண்டது
ஒரு தவறா?
பலபலவென்று விடிந்த
அன்றைய காலைப்பொழுது
அகாலமாய்ப் போனது
எங்கள் குழந்தைகளுக்கு!
பக்குவமாய் பின்னலிட்டு
நெற்றிக்குத் திலகமிட்டு
பள்ளிச்சீருடையில்
அன்றைய
பட்டறைப் பயிற்சிக்கு
தயாராகினர் சிறுமிகள்…
அகம் நிறைந்த கனவுகள்
சுமந்தவர்கள் இவர்கள்.
தமதிடத்தைத் தரமுயர்த்தும்
எதிர்காலச் சிற்பிகளாய்
தலைமைத்துவம் பயில
பயிற்சிப் பட்டறைக்கு
வந்தவர்கள்
சிங்களத்தின் குண்டுவீச்சால்
குதறுண்டு போயினர்.
அத்தனை பாடசாலைகளும்
பரிதவித்துப் போயின!
வருங்கால தலைமைகளை
உருவாக்கவென…
தேர்ந்தெடுத்து தெரிவுசெய்து,
பெற்றவர் அனுமதி பெற்று
கருத்தரங்கில்
கலந்து கொண்ட மாணவச்
செல்வங்கள் இவர்கள்!!
உக்ரேனின் பெண் பிசாசு
விமானி வடிவத்தில்
வந்து
கிபிர் குண்டுகளை வீசியதாக
பத்திரிகைகள் பத்தியாய் எழுதின.
என்ன பயன்?
மகிந்தவிற்கும் இன்னமும்
மரணம் வரவில்லை.
கொலைஞர்கள் யாரும்
தண்டிக்கப்படவுமில்லை.
ரஷ்ய குண்டுவீச்சில்
உக்ரேன் பள்ளிகள்
பற்றி எரிந்தனவாம்!
குழந்தைகள் குமரியர்
கொல்லப்பட்டனராம்!
கூக்குரல் அழுகுரல்
அங்கு விண்ணை முட்டுகிறதாம்!!
உற்றுக் கேளுங்கள்
உலக மக்களே!
செஞ்சோலை கூக்குரலும்
அதனுள் இருக்கலாம்!
-பொழில்.
(14/08/2006 அன்று, தலைமைத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள செஞ்சோலை வந்திருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளில் சிங்கள இனவாத அரசின் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 61 மாணவிகளினதும் காயப்படுத்தப்பட்ட, அங்கவீனமாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவியரினதும் நினைவாக எழுதப்பட்டது.)