
இராவணன் தமிழ் மன்னரா? சிங்கள மன்னரா? வரலாறு கூறுவதென்ன?
‘இலங்கை மன்னன் இராவணன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.‘ இந்த ஒருகருத்து சிலரை புன்னகைக்க வைத்தது. இன்னும் சிலரை சிந்திக்க வைத்தது.
‘இலங்கையின் பூர்வீகம் தமிழ் என்பது பொய் என எடுத்துரைக்கும் வகையில் வரலாற்று புராதன சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்’ – இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்து.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (11/08) இடம்பெற்ற இலங்கை மன்னன் இராணவன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர,
“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதையை கடத்தி வந்ததாக குறிப்பிட்டால், பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியாக உள்ளது.
மன்னராட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன.இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதையை கொண்டு வந்ததாக குறிப்பிடுவதை மறுக்க முடியாது என்று குறிப்பிடுகிறேன்.
இராவணன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர்.இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.
தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்.மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இராவணனின் படை கொடியில் சிங்கம் சின்னம் உள்ளது.
இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே, இராணவன் சிங்கள தலைவர்” எனத் தெரிவித்தார்.
உண்மையிலேயே, இலங்கை மன்னனான இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகிறன.
ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், கம்பன் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தார்.
இதனால் இராமனே நமக்கு தெய்வமானார். தமிழ் மன்னனான இராவணனை அரக்கனாக நாம் பார்க்கிறோம்.எவ்வாறாயினும், இது தொடர்பில் நாம் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

இது தொடர்பில் அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி ஜோதிலிங்கத்திடம் வினவிய போது, அவர் மாறுபட்ட கருத்தை முன்வைத்தார்.
அவர் கூறியதாவது,
“இராவணன்’ சிங்கள மன்னன் என்பதையும் தமிழ் மன்னன் அல்ல என்பதனையும் நிரூபிக்க வரலாற்று ரீதியாக நிரூபிக்க சான்றுகள் எதுவும் இது வரையில் இல்லை.
இராவணன் என்பவர் ஒரு தமிழ் மன்னன் என்பது கூட மத ரீதியான ஒரு கருத்து மாத்திரமே. இதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடையாது, எது சரி? எது பிழை? என்பதை எங்களால் நிரூபிக்க முடியாது.ஆய்வு ரீதியில் உள்ளவர்கள் எவராலும் இது தொடர்புபட்ட விவாதங்களை முன்வைக்க முடியாது.
ஒரு மூலத்திலிருந்து தான் தமிழ் மற்றும் சிங்களம் என்பன ஆரம்பித்தன என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை கள ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.திராவிட மொழிக்கும், சிங்கள மொழிக்கும் பல தொடர்புகள் உண்டு. இது கிட்டத் தட்ட ஆய்வு ரீதியாகநிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல ஆய்வுகளில், உடல் வடிவங்கள் ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.இவ்வாறு, தமிழ் மற்றும் சிங்களம் என்பன ஒரே மூலத்திலிருந்து வந்தவை என நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்து ஒத்துப் போகிறது.
இதேவேளை, பெளத்தம் இந்து மதத்தின் இணை மதம் என இந்தியாவில் இன்னும் கருத்துக்கள் பல நிலவி வருகின்றன.இந்நிலையில், பெளத்த மதம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டமையால் ஒரே மூலம் என்பதனால் பாராளுமன்றில் கூறப்பட்ட கருத்து கிட்ட தட்ட ஒத்துப்போகிறது.
பெளத்தம் வட இந்தியாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.ஆரம்பகாலத்தில் தமிழ் பெளத்தம் என்பது ‘மஹாஜன பெளத்தம்’ என பார்க்கப்பட்டது.
இராவணணின் கதைகள் பூர்வீகமானவை, நம்பிக்கையின் புராணக்கதைகள் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.
விஜயனின் வருகை கூட ஒரு புராணக்கதையாகவே பார்க்கப்படுகிறது. ஆரம்ப வரலாற்றில் விஜயன் தன்னுடைய 700 தோழர்களுடன் இலங்கைக்கு வந்ததாக கூறும் மகாவம்சம் அவர் இலங்கையில் இருந்த சிங்களப் பெண்ணை திருமணம் செய்ததாக கூறுகிறது.
அவ்வாறெனில் இராவணன் சிங்கள மன்னனாக இருக்கலாம். எவ்வாறாயினும் இலங்கை மன்னன் எனக்கூறப்படும் இராவணன் தமிழ் மன்னனா? அல்லது சிங்கள மன்னனா? என்பதனை நிரூபிக்க எந்த விதமான வரகலாற்று ஆதாரங்களும் இல்லை என்பதே என்னுடைய கருத்து“ – என தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியரான முத்துகிருஷ்ணா சர்வானந்தனிடம் வினவிய போது,
“பெயருக்காகவும், புகழுக்காகவுமே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.பாராளுமன்றத்தில் பதிவு செய்யக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது.
ஆரம்பகாலத்தில் இராவணன் புஷ்பக விமானத்தில் இந்தியாவிலிருந்து சீதையை இலங்கைக்கு அழைத்து வந்ததாக புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. எனினும், அவற்றுக்கான சான்றுகள் எதுவும் இல்லை.
சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து உண்மையெனில், இலங்கை ஏன் இன்னும் தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கியுள்ளது
இராவணனின் புஷ்பக விமானம் அவ்வளவு தொழில்நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டதெனின், நம் நாட்டில் தொழில்நுட்பத்துறையானது பாரிய வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும்.
நாட்டு மக்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
பிரதான ஊடகங்களின் முதல் பக்கங்களில் இந்த செய்தி வந்திருந்ததை பார்த்தேன். இவ்வாறு தங்களுடைய பெயரையும் புகழையும் ஈட்டுக்கொள்வதற்கே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து மக்களை திசை திருப்பி வருகின்றன.
நாம் புத்திசாலித்தனமாகச் செயற்பட வேண்டும், இவ்வாறான கருத்துக்களை காதில் வாங்கிக்கொள்ளாது புறக்கணிப்பதே சிறந்தது“ – என அவர் தெரிவித்தார்.
இராவணன் தமிழ் மன்னரா சிங்கள மன்னரா என்ற கோணத்தில் கடந்த சில நாட்களாக இலங்கையில் தமிழ், சிங்கள தரப்புகள் கருத்துகளை முன்வைத்து வருகின்றன.
என்றாலும், ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும் தென்னிந்திய வரலாற்று நூல்களிலும் இராவணன் ஒரு தமிழ் மன்னராகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான்.
ஈழத்து நூல்களில் இராவணன் தமிழ் மன்னராகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். உலகம் முழுவதும் இராவணன் ஒரு தமிழ் மன்னன் என்ற அடையாளம் நிலவும் சூழலில், கடும் பௌத்த தேசிய வாதத்தை பேசக்கூடிய சரத் வீரசேகர நாட்டில் மீண்டும் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடிய வகையில் பல்வேறு கருத்துகளை கூறிவருகிறார்.
சரத் வீரசேகரவின் கருத்துக்கு தமிழ் தலைவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.
-கனூஷியா புஷ்பகுமார்.