எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்?

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்?

-பாரி-

பொருளாதார சீர்குலைவினால், இயங்க முடியாமல் இருக்கும் இலங்கைத் தேசத்தில், மக்களின் வெறுப்பும் கையாலாகாத நிலையும் போராட்டங்களாகவும் கலவரங்களாகவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றன. இலங்கையின் அரசுக்கட்டில் 6வது முறையாகப் பதவியேற்றிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அவர் பதவியேற்ற கையுடன் காத்திருந்தது போல வாழ்த்துக்களைச் சொரிந்திருக்கின்றன அமெரிக்காவும் இந்தியாவும். இந்திய உயர்ஸ்தானிகர் ரணிலைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். இவற்றைப் பார்க்கும்போது, ரணிலின் பதவியேற்பின் பின்னால் அமெரிக்க, இந்திய உந்துதல் இருப்பது உறுதியாகிறது. இவை மகிந்தவை இறக்கி தமக்குச் சார்பான ரணிலைக் கொண்டுவரவா அல்லது கோத்தாவின் பதவியைத் தக்கவைக்கவா அல்லது வேறு ஏதாவதா என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், ஒரு காப்பானாகப் பதவிப் பிரமாணம் செய்த ரணில் நாட்டைக் கைதூக்கி விடப் போகிறார் என்று கனவுகூடக் காணக்கூடாது. முதல் ஐந்து தடவைகளிலும் ஒரு தடவைகூட பதவிக்காலம் முடியும் வரை நிலைத்திருக்காதவர் ஆறாவது தடவையாக பதவியேற்றிருக்கிறார். முதல் ஐந்து தடவைகளிலும் ரணில் என்னவெல்லாம் செய்திருக்கிறார், நாட்டின் வீழ்ச்சியில் அவருக்கிருந்த பெரும்பங்கு என்ன என்பதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

அவர் காலத்தில், மத்திய வங்கியைப் பிணையாக வைத்து நடந்த வர்த்தக மோசடியில் இலங்கை சுமார் 145 பில்லியன் ரூபாய்களை இழந்தது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் தொடர்ச்சியாக நட்டமடைந்தன. 2018 இல் மட்டும் 42,364 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டது.

ரணிலுக்கும் ‘நல்லவர்’ மைத்திரிபாலவிற்கும் இடையில் நடைபெற்ற அரசியல், அதிகார, பதவிப் போட்டிகளினால், 2018 இல் மட்டும், வெளிநாட்டு உதவியாகக் கிடைக்கும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை இழந்தது.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் ஊழலும், வெளிநாடுகளில் அவர்களால் பதுக்கப்பட்ட இரண்டு பில்லியன் பணம் தொடர்பான விபரங்களும் அம்பலப் படுத்தப்பட்ட பின்னரும் ரணில் மகராசன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதிலாக, நீதிமன்றப் பொறிமுறைகளினூடாகவும் அரசின் தலையீடுகளின் மூலமும் காப்பாற்றப்பட்டனர் அந்தப் பெருச்சாளிகள்.

2015 – 2016 ஆண்டு காலப்பகுதியில், சுமார் 7436 மில்லியன் வரையான கடன் பழுவைச் சுமந்து கொண்டிருந்தது இலங்கை. மைத்திரி காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75% ஆக இருந்த கடன்பழு, 2018 ரணில் காலத்தில் 77% ஆக உயர்ந்தது. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவம் தோல்வியிலிருந்து படுதோல்வியாகச் சரிய ரணிலும் ஒரு காரணம். போரினால் கடன்பட்டோம் என்கிறார்களே, 2008 இல் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, வெறுமனே கடன் பழு 40% மட்டுமே இருந்ததை மக்களுக்குச் சொல்லத் தயங்கியது ஏன்?

2015 – 16 காலப்பகுதியில், இலங்கையில் உள்நாட்டுக் கடன் 12% ஆகவும், வெளிநாட்டுக் கடன் 25% ஆகவும் இருந்தது. ஊழல் பட்டியலில் உலகில் 12வது இடத்திலிருந்தது கௌரவ சிறிலங்கா. முன்பே சரியத் தொடங்கியிருந்த வெளிநாட்டு முதலீடுகளின் வீதம் 2018 காலப்பகுதியில் பெருவீழ்ச்சி கண்டது.

இவையெல்லாம் ஒருசில உதாரணங்கள் மட்டுமே. மகிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையில் பெரிய வேறுபாடில்லை. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், இப்போதும் அவர்கள் திரைமறைவில் நல்லுறவுடன்தான் இருக்கிறார்கள். மகிந்தவும் ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, மகிந்தவைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ரணில் இறங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கூட்டுக்களவாணிகள் தொடர்ந்தும் பதவியில் நிலைத்தால் மக்களின் வாழ்வில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

ரணில் அமைச்சரவையை உருவாக்கியதன் பின், இந்தியாவிடமும் வேறு சில நாடுகளிடமும் இருந்து கொஞ்சக் கடன் கிடைக்கும், முக்கியமாக IMF கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. சொற்ப காலத்திற்கு எரிபொருள், மற்றும் பிற வசதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கும். பொருட்களின் விலை சற்றுக் குறையலாம். திரும்பவும் பழைய நிலைதான்.

ரணிலால் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு தலைவனாக முடியாது. போராட்டங்கள் கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் மக்களையும் உலகையும் சாந்தப்படுத்தவும் போடப்பட்டுள்ள இந்த முகமூடி விரைவில் கிழிந்துவிடும்.

நாட்டை இந்த நிலைக்குத் தள்ளிய ஊழல் குற்றவாளிகள் மேல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதலாக்கப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். மக்களுக்குத் தீங்கான அதிகாரங்கள் அகற்றப்பட்டு அரசியலமைப்பில் ஒரு நியாயமான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இனவாதம் ஒழிக்கப்பட்டு அரசியற் பழிவாங்கல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படியான மாற்றங்கள் தென்பட்டால் மட்டுமே மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்பலாம்.

   
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )