
காணாமல் போன என் கண்மணியே!!
எங்கே தேடுவேன் உன்னை?
நீ நடந்த பாதையெல்லாம்…
உனைத் தேடியும் எங்கும்
காணவில்லையே…!!
காணாமல் போன என் கண்மணியே!!
என் செல்வமே!!
நீ எனக்கு
வரமாக வந்த பிள்ளையடா…!
உனை கருவினில் சுமந்த போது…
என் கற்பனைகளும்
உனைச்சுற்றியே
சிறகடித்துப் பறக்க
நீ பிறந்தாயடா!!
பிரசவவலியின் மறு ஜென்மம் நீ!
உச்சிமுகர்ந்து
உள்ளம் கையில் தாங்கிய
போது வலி மறந்து போனது.
தத்தி தளிர்நடை போட்டு
அம்மா! என்ற ஒரு சொல்லில்
உலகமே காலடியில்!!
அப்படி
ஒரு இறுமாப்பு!
காலங்கள் உருண்டோட…
கல்வியில் சிறந்தவனாய்,
கலைகளில் வல்லவனாய்,
நின்றாயடா!
தமிழனின் தலைவிதியோ இது?
தொடர் இடப்பெயர்வு
முள்ளிவாய்க்கால்வரை
தொடர…..
சிங்கள இராணுவத்தினர்
கைகளில்
என் கண்மணியை
கடைசியாக கண்டேனே!!
முப்படைகளின் தாக்குதலில் தப்பி,
மூர்க்கர் கைகளில் கண்டேனே!
கலங்கிய கண்களுடன்
எனைபார்த்த பார்வை….!!
என் பெற்றவயிறு
பற்றியெரியுதடா… என் செல்லமே…!
அன்றிலிருந்து இன்று வரை..,
உன்னைக் காணாத ஏக்கத்தில்…
நடைப்பிணமாக…
வருவாயா.., என் செல்லமே!
உன் வாயால்
அம்மா என்ற ஒற்றைச்
சொல்லுக்காய்
காத்திருக்கிறேன்…
வருவாயா என் செல்லமே!
-அம்முக்குட்டி