சர்வமதத் தலைவர்களை பிக்கு தலைமையிலான குழு தடுத்து வைப்பு இந்துக் குருவை தாக்கவும் முயற்சி, விடுவிக்க பொலிஸார் கடும் முயற்சி

சர்வமதத் தலைவர்களை பிக்கு தலைமையிலான குழு தடுத்து வைப்பு இந்துக் குருவை தாக்கவும் முயற்சி, விடுவிக்க பொலிஸார் கடும் முயற்சி

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பிலும் அப் பகுதியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது மற்றும் காணிகள்  அபகரிப்பது தொடர்பாக ஆராய்வதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை அங்கு  சென்ற சர்வமதத்  தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை,பௌத்த பிக்கு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து  தடுத்து வைத்திருந்தனர்.

மேற்படி பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்  தொடர்பாகவும் ஆராய மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதத்  தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் கொண்ட குழுவினர் நேற்றுக் காலை மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு  வாகனங்களில் சென்றனர்.

இக் குழுவில் இரு இந்துக் குருக்கள்மார்,இரு வணபிதாக்கள் , ஒரு மெனளலி 3 ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேர் சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு பகல்  ஒரு மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு எல்லை பகுதியில் உள்ள கம்பி பாலத்திற்கு  அருகே,வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த  சர்வ மதத்  தலைவர்களின் வாகனங்களை,பெளத்த தேரர் ஒருவருடன்  நூற்றுக்கு  மேற்பட்டவர்கள்  வீதித் தடைகளைப் போட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி பலாத்காரமாக வாகனங்களின் திறப்புக்களை பிடுங்கி எடுத்து அவர்களை தடுத்து வைத்ததுடன் இந்து குருக்கள் ஒருவரை தாக்க முற்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இச் சம்பவத்தையடுத்து கரடியனாறு மற்றும் அரங்கலாவ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்று பௌத்த தேரருடனான குழுவினருடன் பேச்சில் ஈடுபட்டுக்  கொண்டிருந்ததாகவும், ஊடகவியலாளர்களின் கமராக்களில் பதிவு செய்த காட்சிகள் அனைத்தையும் தேரர் அச்சுறுத்தி அழித்ததுடன் இந்தச் செய்தியை பிரசுரிக்கக் கூடாது என கடிதம் ஒன்றை வற்புறுத்தி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்களை மீட்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிசாரும்  அந்தப் பகுதிக்கு சென்றதாக தகவல்கள் தெரிவித்தன.

தொடர்ந்தும் பௌத்த தேரர் உடனான குழுவுடன் பொலிசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதுடன் 6 மணித்தியாலயங்களாக தடுத்து வைக்கப்பட்டவர்களை மீட்க முடியாது பொலிஸார் திணறுவதாகவும் எனினும் மாலை 6 மணிவரை அவர்களை விடுவிக்காது பிக்கு குழுவினர் தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இது பற்றி மாவட்டத்திலுள்ள ஏனை சக ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மாவட்ட பொலிசார், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )