
தமிழர்களைக் கொல்ல திட்டமிடுகின்றீர்களா?
தமிழ் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வீழ்ந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு திட்டங்கள் இருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில் 1948 ஆம் ஆண்டில் இருந்து தமிழர்களை அழித்தது போதாதென்று இப்போது மீண்டும் தமிழர்களை அழிப்பதற்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது.
மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் பண்ணையாளர்களை சந்திப்பதற்காக சர்வமத குழு சென்றுள்ளது. இஸ்லாமிய மெளலவி, இரண்டு கிறிஸ்தவ மதக்குருக்கள், இந்து மத குரு ஒருவரும் ஊடகவியலாளர்களும் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் திரும்பி வந்துகொண்டிருந்த போது, பௌத்த மதகுரு தலைமையிலான சிங்கள பெரும்பான்மை குழுவொன்று அவர்களை வழிமறித்து மூன்றரை மணித்தியாலங்களாக அவர்களை தடுத்து வைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் ஜனாதிபதி செயலாளரை தொடர்புகொண்டு கூறியதுடன், ஜனாதிபதி செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு செயலளரிடம் இதுபற்றி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் மூன்றரை மணித்தியாலங்கள் கடந்தும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் சென்ற வாகனங்களின் திறப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு சுற்றிவளைக்கப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட சிங்கள குழுவினருக்கு சாராயம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. தயவு செய்து இங்கு சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக சபாநாயகருக்கு அறிவித்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான இனவெறி செயற்பாடுகள் தொடர்ந்தால் மீண்டும் இந்த நாட்டில் தமிழர்கள் கடந்த காலங்களை போன்று கொன்று குவிக்கக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது. இதனால்தான் சுயாட்சி உரிமையை கோருகின்றோம்.
இதேவேளை எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றி வளைக்கப் போவதாக கம்மன்பில பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் இந்த அழைப்பு உள்ளது. இவ்வாறாக தமிழ் தலைவர்களின் உயிருக்கு நீங்கள் ஆபத்தை ஏற்படுத்த முயல்கின்றீர்களா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதனால் இவ்வாறான இனவாத செயற்பாடுகள் மூலமாக குரூந்துர் மலை போன்ற இடங்களில் தமிழர்களின் வரலாறுகளை மாற்றி முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாவற்குழி, தையிட்டி, குரூந்தூர் விகாரைகள் அகற்றப்பட வேண்டும். தொல்பொருள் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

