மலையகத் தமிழர்களுக்காக அணி திரண்டு சபையை அதிர வைத்த தமிழ் எம்.பி. க்கள்

மலையகத் தமிழர்களுக்காக அணி திரண்டு சபையை அதிர வைத்த தமிழ் எம்.பி. க்கள்

மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை தோட்ட முகாமையாளர் உடைத்தெறிந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்த தோட்ட முகாமையாளரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மலையகம் மற்றும் வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்ததால் சபை சுமார் 2 மணிநேரம் வரை அதிர்ந்ததுடன் அமளிதுமளிப்பட்டது.

சபைக்கு நடுவே வந்தமர்ந்த எம்.பி.க்கள் ‘நரகாசுரனை கைது செய்’, ‘கயவனை கைது செய்’ என முழக்கமிட்டதுடன் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை சபாநாயகருக்கு ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடி தினப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை தோட்ட முகாமையாளர் உடைத்தெறிந்தமைக்கு நீதி கோரி வடிவேல் சுரேஷ் எம்.பி. முழக்கமிட ஆரம்பித்தார். இதனையடுத்து ஏனைய மலையக எம்.பிக்களும் கோஷங்களை எழுப்பியவாறு சபைக்கு நடுவே இறங்க இவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாண எம்,.பி.க்களும் ஏனைய எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இணைந்து கொண்டு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு எம்.பி.க்கள் ‘நரகாசுரனை கைது செய்’, ‘கயவனை கைது செய்’, ‘நீதி வேண்டும்’ என சபைக்கு நடுவே இறங்கி முழக்கமிட்டனர்.

இவர்களை சமாதானப்படுத்த, கட்டுப்படுத்த சபாநாயகர் முயன்றபோதும் முடியாத நிலை ஏற்பட்டதால் படைக்கல சேவிதர்களினால் செங்கோலுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்துக்கு அமைச்சர்கள் ரமேஷ் பத்திரன ,பிரசன்ன ரணதுங்க,ஆகியோர் பதிலளித்து நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோதும் அது முடியவில்லை. இந்நிலையில் சபைக்கு நடுவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சபைக்கு நடுவே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர் .

ரத்வத்தை தோட்டத்தில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை உடைத்த தோட்ட முகாமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய வலியுறுத்தலாக இருந்தது.

வடிவேல் சுரேஷ் எம்.பி

ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்த வடிவேல் சுரேஷ் எம்.பி.கூறுகையில்,

மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் வீட்டை உடைத்து அங்கிருந்தவர்களை வெளியில் தள்ளியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடை தோட்ட அதிகாரியை இன்னும் கைது செய்யவில்லை. இது பெரிய பிரச்சினை. வீட்டை உடைத்தெறிந்த தோட்ட முகாமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலை நாட்டப்பட்ட வேண்டும் அந்த நரகாசுரனை, கயவனை உடனடியாக கைது செய்யுங்கள். பாம்பு கடித்து தோட்டத் தொழிலாளி வைத்தியசாலைக்கு செல்லும் போது, பாம்புதான் கடித்தது என்று தோட்ட அதிகாரியின் கடிதத்தை கேட்கின்றனர். இவ்வாறு கேட்க முடியுமா? என்றார்.

இராதாகிருஷ்னண் எம்.பி. கூறுகையில் ,

14 பேர் கொண்ட குடும்பங்களை தோட்ட அதிகாரி வீடுகளில் இருந்து வெளியேற்றியுள்ளார். இவ்வாறு செய்ய முடியுமா? சட்டம் இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில் ,

மாத்தளை எல்கடுவ ரத்வத்த கீழ் பகுதியில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் அவரது உதவியாளர்களால் கடந்த 19 ஆம் திகதி, அவர்களின் தற்காலிக வீடு உடைக்கப்பட்டு அந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்த வீடு அனுமதி பெற்றே அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பக இந்த வீடு அரசாங்கத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அரச காணியில் அமைக்கப்பட்டிருந்த வீட்டை எப்படி தோட்ட முகாமையாளர் அடித்த நொருக்க முடியும். அதனால் இந்த சம்பவத்துக்கு அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டும்.அத்துடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சம்பவ இடத்துக்கு சென்றார் என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல. அரசாங்கம் தோட்ட மக்களை எவ்வாறு கவனித்து வருகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம். எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க சென்றாலும் தோட்ட மக்களுக்கு அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்ககவில்லை என்றார்.

ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகையில்,

ரத்வத்தை தோட்ட சம்பவம் தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான ரமேஷ் பத்திரண அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவித்து குறித்த சம்பவம் தொடர்பில் வருத்தத்தையும் சபையில் தெரிவித்துள்ளார்.மேற்படி சம்பவத்துடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.சம்பவ இடத்திற்கு சென்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்தமை எதிர்க்கட்சினருக்கு பொறுக்கவில்லை என்றார்.

மனோ கணேசன் எம்.பி. கூறுகையில் ,

ரத்வத்த தோட்டத்தில் நடந்த சம்பவத்தை முழு உலகமும் பார்த்தது. இது முழு இலங்கைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. தயவு செய்து சம்பந்தப்பட்டவரை கைது செய்யுங்கள். நான் ரஜினியோ, அல்லது அஜித்குமாரோ இல்லை சிவாஜி கணேசனோ அல்ல மனோகணேசன். இலங்கையர்களாக இதனை தீர்க்க வேண்டும். எங்களை எவராவது அடித்தால் திருப்பி அடியுங்கள் என்றுதான் கூறுகின்றோம். இதனை தவறாக நினைக்கக் கூடாது. தோட்டங்கள், தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானது அல்ல. அரசாங்கத்திற்கு உரியது. தயவு செய்து சம்பந்தப்பட்டவரை கைது செய்யுமாறு கேட்கின்றோம் என்றார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கூறுகையில்,

தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும்.தோட்ட முகாமையாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதனை ஏற்க முடியாது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என்றார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறுகையில் ,

கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் நீங்கள் யாரும் கலந்துக் கொள்ளவில்லை. அந்தக் கலந்துரையாடலில் நாம் காணி தொடர்பில் பேசினோம். நீங்கள் யாரும் எம்மோடு இணைந்து செயற்படுவதில்லை. நாம் உங்களை மதிக்கிறோம். யாரும் எமக்கு ஆதரவளிப்பதில்லை. அரசாங்கத்தில் எந்த ஆதரவும் எனக்கு கிடைப்பதில்லை. தனியாக செயற்படுவததற்கு சிரமமாக உள்ளது. நீங்கள் அனைவரும் மூத்த உறுப்பினர்கள். எனக்கு உதவி செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணையும் பட்சத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.

வேலுகுமார் எம்.பி. கூறுகையில்

அமைச்சர் ஜீவன் தொண்டாமானின் உணர்வு புரிகிறது. இதுவரையில் அவர் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களுக்கு தனியாக பணியாற்ற முடியவிவ்லை என கூறுகின்றீர்கள். எம்மையும் அழைக்கின்றீர்கள். அங்கு வந்து எவ்வாறு பணியாற்ற முடியும்?. அரசுடனிருந்து உங்களுக்கு பணியாற்ற முடியவில்லையாயின் இங்கு வந்து எம்முடன் அமருங்கள் என்றார்.

சமிந்த விஜேசிறி எம்.பி. கூறுகையில்

தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை காட்டுவதற்கு 13 ஆவது அரசியலமைப்பு திருத்ததை கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். எனினும் மக்களுக்கு இவ்வாறு நடக்கிறது.இதற்கு யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இது ஒரு நாடகம்,மாத்தளையில் இ.தொ.கா.வுக்கு வாக்கு வாங்கி இல்லை. எனவே வாக்கு வங்கியை உருவாக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்.அதில் அமைச்சர் ஜீவன் சிறப்பாக பங்கெடுத்தார் என்றார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறுகையில்,

இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடனும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் தெற்கிலும் நடக்கின்றன. இது நாட்டின் சொத்தே. இதனால் முறையற்ற வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என்று தோட்ட நிறுவனங்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )