
தமிழ் மக்களை சீண்டாதீர் பொறுமைக்கும் எல்லையுண்டு; சரத் வீரசேகர ஒரு மனநோயாளி -செல்வம் எம்.பி.கடும் சீற்றம்
தமிழ் மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. போராடியவர்கள், குண்டுகளைத் தாங்கியவர்கள்.விடுதலை வேட்கை கொண்டவர்கள். எனவே தமிழினத்தை சீண்ட வேண்டாமென சரத் வீரசேகர எம்.பி.யை எச்சரிக்கின்றோம். எமது மக்கள் தொடர்ந்தும் மௌனமாக இருக்க மாட்டார்கள் என எச்சரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், கடற்படையில் சமையல்காரராக இருந்துள்ள சரத் வீரசேகரவை போர்க்காலத்தில் தொடர்ந்தும் சமையலறையில் வைத்திருந்ததன் காரணமாக ஒரு மனநோயாளியாகிவிட்டார் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தொடர்ந்தும் பேசுகையில்,
சரத் வீரசேகர எம்.பி. ஒரு மனநோயாளி .அவர் கடற்படையில் சமையல்காரராகத்தான் இருந்துள்ளார்.போர்க்காலத்தில் தொடர்ந்தும் அவரை சமையலறையில் வைத்திருந்ததன் காரணமாக ஒரு மனநோயாளி போல் செயற்படுகின்றார்.அவர் 13 ஐ தரமாட்டேன் என சொல்கின்றார்.சமஸ்டியை தரமாட்டேன் என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார். இவ்வாறு சொல்வதற்கு இவர் யார்?எந்த அடிப்படையில் இவர் இவ்வாறு பேசுகின்றார் ? இவருக்கு ஆதரவாக இருப்போர் யார்?
இவரின் கருத்துக்கள் அரசியல் சாசனத்தை எதிர்ப்பவையாகவே உள்ளன.
இப்போது பார்த்தால் கனடா தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கின்றார். அமெரிக்க தூதுவரை , தூதரகத்தை மிக மோசமாக சாடுகின்றார்.இந்தியாவையும் அவர் சாடுகின்றார். வெளிநாடுகளின் நிதியை பெற்று சாப்பிட்டு வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர, எங்களது நியாயமான உரிமைகள் நாங்கள் கோருகின்ற போது அதனை அவர் எந்த அடிப்படையில் எதிர்க்கின்றார்?
அதனால்தான் அவர் ஒரு மனநோயாளி என நாங்கள் கூறுகின்றோம்.அவரின் கருத்துக்களை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. சரத் வீரசேகர மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார். அவரின் கட்சித் தலைமை அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும். அத்துடன் அவரை இந்த சபையிலிருந்து நீக்க வேண்டும்.
எமது மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. போராடியவர்கள், குண்டுகளைத் தாங்கியவர்கள்.விடுதலை வேட்கை கொண்டவர்கள். தமிழினத்தை சீண்ட வேண்டாமென சரத் வீரசேகரவை எச்சரிக்கின்றோம்.
உங்களின் தடிப்பு கதைகளை உங்களுடன் வைத்திருங்கள். எமது மக்கள் தொடர்ந்தும் மௌனமாக இருக்க மாட்டார்கள் தொடர்ந்தும் சரத் வீரசேகர இனவாதம் கக்கினால் எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என சரத் வீரசேகரவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

