
கடன் மறுசீரமைப்பு தீர்மானத்திற்கு ராஜபக்ஷக்கள் வாக்களிகாதது ஏன்?
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு கடன் மறுசீரமைப்பு தீர்மானம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்துள்ளதாலும் மனச்சாட்சிக்கு விரோதமாக அதற்கு ஆதரவு வழங்க முடியாது என்பதாலுமே ராஜபக்ஷக்கள் வாக்களிப்பை தவிர்த்தார்கள் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவலவிலுள்ள சுதந்திர மக்கள் சபை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
புதன்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது,தேசிய கடன் மறுசீரமைப்பு தீர்மானத்தின் விவாதத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்பட்ட விதம் முறையற்றது என்பது தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை சபாநாயகர் மதிக்கவில்லை.அரச தரப்புக்கு சார்பாகவே சபாநாயகர் செயற்பட்டார்.
இந்த தேசிய கடன் மறுசீரமைப்பு, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்துள்ளதாலும் மனச்சாட்சிக்கு விரோதமாக ஆதரவு வழங்க முடியாது என்பதாலுமே ராஜபக்ஷக்கள் வாக்களிப்பை தவிர்த்தார்கள்.
தேசிய கடன்மறுசீரமைப்புக்குள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் ஆகியவற்றை பாதுகாக்க எவ்வித வழிமுறையும் உள்வாங்கப்படவில்லை.எனவே ஊழியர்களின் இறுதி சேமிப்பை பாதுகாப்பதற்கு சட்ட உத்தரவாதம் வழங்குவது மிகவும் அவசியம். இவ்விடயம் தொடர்பில் தொழில் அமைச்சு விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர் ஈ.பி.எப் மற்றும் ஈ.ரி.எப் ஆகியவற்றுக்கு 9 சதவீத வரி வழங்கப்படுவது கட்டாயமாக்கப்படவில்லை.அத்துடன் எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.9 சதவீத வட்டி வழங்கப்பட வேண்டும் என கொள்கை ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதை எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாற்ற முடியும் என்றார்.

