
ஜனாதிபதி வேட்பாளராக பஸில் களமிறங்குவார் !
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை களமிறக்க வேண்டும் என்று அந்தக் கட்சிக்குள் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அந்தக் குழுவினர் கட்சியின் தலைமைத்துவத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பஸில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதென்றால் அவர் இரட்டைக் குடியுரிமையில் இருந்து விடுபடும் வகையில் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும். இதனால் பஸில் ராஜபக்ஷவினால் இதுவரையில் இது குறித்து உத்தியோகபூர்வமாக எந்தவித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் கட்சியினரின் யோசனை குறித்து அவர் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி அவர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தால் அவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்று அதன்பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே தேசியப் பட்டியல் ஊடாக பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் சென்றிருந்த நிலையில், புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்பதனால் அவர் பதவி விலகியிருந்தார். இந்நிலையில் அவர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து மீண்டும் பாராளுமன்றம் வர விரும்பினால் அவருக்கு தமது ஆசனத்தை வழங்குவதற்கு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி பஸில் ராஜபக்ஷவை கொண்டு பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைமை பீடத்திற்கு யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் இறுதி முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

