
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவது இறையாண்மைக்கு பாதிப்பு
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அது மக்கள் இறையாண்மைக்கு பாதிப்பானதாகவே அமையும் என்று தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நெருக்கடி காரணமாக தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில் உள்ளூராட்சி சட்டங்களைத் திருத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவின் தனிநபர் பிரேரணை தொடர்பான வர்த்தமானி குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த தனிநபர் பிரேரணை தொடர்பான வர்த்தமானியில் மாநகர சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை திருத்தச் சட்டம் மற்றும் உள்ளுராட்சி சபை சட்டம் ஆகியவற்றில் உள்ள பல சரத்துகளில் திருத்தங்களை அறிவித்துள்ளன. இதன்படி, 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச, மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 252) மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 255) ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜயந்த கெட்டகொடவினால் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
இது அமுல்படுத்தப்பட்டால், தேர்தல் அறிவிக்கப்பட்டு, நெருக்கடி காரணமாக மேற்படி தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில், 12 மாதங்கள் கடந்தாலும் அமைச்சரின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கப்பட்ட ஒரு காலத்திற்கு உள்ளூராட்சி சபையை மீண்டும் கூட்டுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,
”சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கே அதிகாரம் வழங்கப்படும். இவ்வாறாக வழங்கப்படும் கால எல்லை முடிவடைந்த பின்னர் மக்களே அவர்களுக்கு அதிகாரத்தை வழங்க முடியும். இதனை விடுத்து இது தொடர்பில் அமைச்சரால் தீர்மானிக்க முடியாது. இவ்வாறு செய்தால் அது நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் பாதிப்பாகவே அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

