
அரசு பல விடயங்களை மூடி மறைத்தே கடன் மறுசீரமைப்பு
பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டே கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறெனில் யாருடைய நலன்களுக்காக இந்த வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டைக் கொள்ளையடித்து, மோசடி செய்த தரப்பினரின் பொருளாதாரத்தைப் பாதுகாத்து, மீண்டும் அப்பாவி மக்களின் பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறிக் கொண்டு கடன் மறுசீரமைப்பு எனும் பெயரில் இரண்டாவது கொள்ளை இடம்பெறப் போகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேலும் கூறுகையில்,
கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் போது தனிநபர்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ பாதிப்புக்கள் ஏற்படாது என்ற கோணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார். எனினும், இந்தக் கருத்துக்களை எந்தளவுக்கு நம்பலாம் என்பது ஒரு கேள்விக் குறி.
நாட்டில் பொருளாதாரத்தை முற்று முழுதாக அழித்த தரப்பு தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்து வருகிறது. நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடித்து கொள்ளையடித்த பணங்களை வெளிநாடுகளில் கொண்டு சென்று ஒளித்து வைத்தமையாலும், கொள்கை வகுப்பில் ஏற்பட்ட தவறுகளாலும் நாட்டில் வாழும் அப்பாவி மக்களின் பொருளாதாரம் அழிவினைச் சந்தித்துள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு கடன் மறுசீரமைப்பு அவசியமெனும் பேரிலே அழிந்து போயிருக்கின்ற மக்களின் பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு தான் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்த விடயம். இந்தக் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டம் எப்படி அமையப் போகிறது என்பது தொடர்பில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை என்பதுடன் மக்களை அரவணைத்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலும் இதுவரை எதுவுமே நடக்கவில்லை.
கடுமையான சில முடிவுகளைப் பொருளாதார ரீதியாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கூட எங்களைப் பொறுத்தவரை மக்களின் ஆதரவு, நம்பிக்கையைப் பெற்ற ஒரு ஆட்சி நாட்டிற்கு அவசியம்.இவ்வாறானதொரு ஆட்சி நிலவினால் மாத்திரமே மக்கள் விரும்பி நாட்டிற்காகச் சில தியாகங்களைச் செய்ய முன் வருவார்கள். இதனை விடுத்து ஏற்கனவே நாட்டின் பொருளாதாரத்தைக் கொள்ளையடித்தவர்கள் கடன் மறுசீரமைப்பு என்ற பெயரிலே மீண்டும் மக்களின் பொருளாதாரத்தை கொள்ளையடிக்கப் போகின்றார்கள் என்றால் அதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்த யதார்த்தத்தை ரணில் விக்ரமசிங்க நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

