மகிந்த வீடு செல்ல நேரம் வந்து விட்டது

மகிந்த வீடு செல்ல நேரம் வந்து விட்டது

மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடும் அவசியமில்லை எனவும் தற்போது அவர் ஓய்வுபெற்று, ஓய்வாக இருக்க வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருக்கின்றாரா என ராஜாங்க அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை போல் நாட்டுக்கு சேவைகளை செய்த தலைவர்கள் வேறு எவருமில்லை. தற்போது நாட்டில் பிரபலமான அரசியல்வாதியும் அவரே. எனினும் அவர் ஓய்வுபெற வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை.

நாட்டு மக்களின் நலனுக்காக தேவை என்றால், பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து பயணத்தை மேற்கொள்ள தயாராக இருக்கின்றது.

மக்களுக்கு தேவையான நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமே அன்றி, போராட்டகாரர்களுக்கு தேவையான நேரத்தில் அல்ல.

அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் தேர்தலை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

சில அரசியல்வாதிகளுக்கு தேர்தல் தேவைப்படுகிறதே தவிர நாட்டு மக்களுக்கு தேர்தல் அவசியமில்லை.

மக்கள் நிராகரிக்கும் நாளில் நானும் அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கின்றேன். அதனை விடுத்து போராட்டகாரர்களுக்கு பயந்து அரசியலில் இருந்து விலக தயாரில்லை.

அமைச்சுப் பதவி கிடைக்காத காரணத்தினால், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெறுப்பில் இருப்பதாக கூறப்படுவது குறித்து நான் எந்த கருத்தை வெளியிட முடியாது.

தகுதியானவர்களுக்கு பொருத்தமான நேரத்தில் அமைச்சு பதவிகள் கிடைக்கும் என எண்ணுகிறேன். எவ்வாறாயினும் பொதுஜன பெரமுனவின் இரண்டாவது வரிசை அணியினர் எழுச்சி பெற்று செயற்பட்டு வருகின்றனர் எனவும் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )